{"Header": ["\nவிளக்கமறியலிலுள்ள கணவருக்கு ஹெரோய்ன் கொண்டு சென்ற பெண் கைது"], "Time": ["\n01 Jul, 2015\t", "| 9:45 pm ", "\n"], "Url": "https://www.newsfirst.lk/tamil/2015/07/01/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%95%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81/", "Content": "போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களைக் கண்டுபிடிக்கும் தேடுதல் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. இதன்கீழ் ஹெரோய்ன் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கடவத்தை பகுதியில் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டார். பொலிஸாருக்குக் கிடைத்த தகவலொன்றுக்கு அமைய, களனி பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண் தமது பிள்ளைகளுடன் முச்சக்கர வண்டியொன்றில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணுடன் 13 வயது மற்றும் மூன்றரை வயதுப் பிள்ளைகளும் முச்சக்கரவண்டியில் பயணித்ததாக பொலிஸார் கூறினர். அவரிடம் இருந்து 1 கிராம், 788 மில்லி கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது. மஹரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது கணவருக்கு வழங்குவதற்காக, ஹெரோய்னை சிறு பக்கெற்களாக பொதி செய்து, உடலில் மறைத்து கொண்டு சென்றுகொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் கணவரும் ஹெரோய்ன் போதைப்பொருள் சம்பவம் ஒன்று தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்."} |