{"Header": ["\nதமது விடுதலைக்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை"], "Time": ["\n04 Jan, 2016\t", "| 8:00 pm ", "\n"], "Url": "https://www.newsfirst.lk/tamil/2016/01/04/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae/", "Content": "தைப்பொங்கல் பண்டிகையைப் புறக்கணித்து தமது விடுதலைக்கான அழுத்தத்தை கொடுக்குமாறு தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வழக்கு விசாரணைக்காக இன்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்தனர். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 21 தமிழ் அரசியல் கைதிகள் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இன்று புதிதாக மூன்று கைதிகள் வழக்கு விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டதுடன் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுவதாக பங்கரவாத தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்தனர். சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை சமர்ப்பிக்கப்படாத நிலையில் அரசியல் கைதிகளை இம்மாதம் 13 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கடந்த ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் வாக்குறுதி காரணமாக உண்ணாவிரதத்தை கைவிட்ட கைதிகள் மீண்டும் நவம்பர் மாதம் 9ஆம் திகதி உண்ணாவிரத்தை ஆரம்பித்தனர். இந்த நிலையில் நவம்பர் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் 39 கைதிகளை பிணையில் விடுவிப்பதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியது. மேலும் சில கைதிகளை புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்தது. எவ்வாறாயினும் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்."} |