{"Header": ["\nவலதுசாரியான மிஷெல் டெமர் பிரேசிலின் புதிய அதிபராக பதவியேற்பு"], "Time": ["\n02 Sep, 2016\t", "| 5:29 pm ", "\n"], "Url": "https://www.newsfirst.lk/tamil/2016/09/02/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%a4%e0%af%81%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b7%e0%af%86%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9f%e0%af%86%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d/", "Content": "பிரேசிலின் அதிபர் பதவியிலிருந்து தில்மா ரூசெப் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய அதிபராக மிஷெல் டெமர் (75) பதவியேற்றுள்ளார். அவருக்கு பிரேசில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரிக்கார்டோ லெவன்டோவ்ஸ்கி பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். பிரேசிலில் கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று தில்மா ரூசெப் அதிபராகப் பதவியேற்றார். பிரேசிலின் முதல் பெண் அதிபரான அவர், அந்நாட்டின் பொருளாதார நிலவரம் குறித்த தவறான தகவல்களை அளித்து முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, அவரைப் பதவி நீக்கம் செய்வதற்கான நம்பிக்கையில்லாத் தீர்மானம் அந்நாட்டின் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்திற்கு 61 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததுடன், 20 உறுப்பினர்களே எதிர்ப்பு வெளியிட்டனர். இந்த முடிவையடுத்து, அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வலதுசாரியான பி.எம்.டி.பி. கட்சியைச் சேர்ந்த மிஷெல் டெமர் (Michel Temer) பதவியேற்றுள்ளார்."} |