{"Header": ["\nபாராளுமன்றத்தை 5 ஆம் திகதி கூட்டும் தீர்மானத்தை வரவேற்கிறோம் – ஐ.தே.க."], "Time": ["\n01 Nov, 2018\t", "| 12:05 pm ", "\n"], "Url": "https://www.newsfirst.lk/tamil/2018/11/01/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%90%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4/", "Content": "Colombo (News 1st) எதிர்வரும் 5 ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு எடுத்த தீர்மானத்தை வரவேற்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அலரிமாளிகையில் தற்போது நடைபெற்ற ஊடக சந்திப்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எதிர்வரும் 16ஆம் திகதிக்கு பதிலாக 5ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது எமக்கு கிடைத்த வெற்றி. நாங்கள் ஒரு உண்மையான கோரிக்கையை விடுக்கின்றோம். நாங்கள் 5ஆம் திகதி இதற்குத் தீர்வு காண்போம். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினரின் கருத்துக்கு நாங்கள் மதிப்பளிப்போம். அதுவே ஜனநாயகம் என்பதை நினைவூட்ட விரும்புகின்றோம். அதுவே சட்டவாக்கம். தற்போது இது பாராளுமன்றத்தின் நேரம். பாராளுமன்ற செயற்பாடுகள் தொடர்பில் எர்ஸ்கின் மே எழுதியுள்ள புத்தகத்தில், பாராளுமன்றத்தின் கட்டளைகள் தொடர்பில் தௌிவூட்டப்பட்டுள்ளது என அஜித் பி பெரேரா தொடர்ந்தும் கூறியுள்ளார்."} |