{"Header": ["\n66 வருடப்பூர்த்தியைக் கொண்டாடுகிறது இலங்கை விமானப்படை"], "Time": ["\n02 Mar, 2017\t", "| 7:24 pm ", "\n"], "Url": "https://www.newsfirst.lk/tamil/2017/03/02/66-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/", "Content": "இலங்கை விமானப்படை இன்று 66 வருட பூர்த்தியைக் கொண்டாடுகின்றது. 1951 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி ரோயல் இலங்கை விமானப்படை என்ற பெயரில் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட இலங்கை விமானப்படையின் முதலாவது விமானப்படைத் தளபதியாக எயார் கொமடோர் ஜி.சி.பிலேடன் செயற்பட்டார். இலங்கை குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் ரோயல் விமானப்படை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1959 ஆம் ஆண்டு ஜெட் விமானங்களைத் தன்னகத்தே வைத்திருந்த விமானப்படைக்கு 90 ஆம் ஆண்டில் தாக்குதல் ஜெட் விமானங்கள் வழங்கப்பட்டன. நாடு யுத்தத்திற்காகத் தயாராகிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் M17 என்ற தாக்குதல் ஹெலிகொப்டரும் சேவையில் இணைக்கப்பட்டது. 1997 ஆம் ஆண்டு பயங்கரவாதத்தினை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட ஜய சிகுரு நடவடிக்கையின் போது 20 வெற்றிகரமான தாக்குதல்களை விமானப்படை மேற்கொண்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு இலங்கை விமானப்படைக்கு தேசிய விருது ஒன்றும் வழங்கப்பட்டது. இலங்கையின் ஆகாய மார்க்கத்தைப் பாதுகாப்பதுடன் இயற்கை அனர்த்தங்களின் போது மக்களைப் பாதுகாப்பாக மீட்பதற்கும் விமானப்படை விசேட ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது."}