ta_5028264_0 தமது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும் வகையில் இரண்டு கட்டுரைகளை பிரசுரித்தமைக்காக ஒரு பில்லியன் ரூபாவை நட்ட ஈடாக வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபையின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய சிலோன் நியூஸ் பேப்பர்ஸ் தனியார் நிறுவனத்திற்கு இரண்டு கோரிக்கைக் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார். ta_5028264_1 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் மற்றும் 16ஆம் திகதிகளில் மவ்பிம பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட இரண்டு கட்டுரைகளால் தமது தரப்பின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக மல்லவ ஆராய்ச்சி சட்ட நிறுவனத்தின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறித்த கோரிக்கை கடிதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ta_5028264_2 ஒரு கட்டுரையால் தமது தரப்பிற்கு ஏற்பட்ட பாதிப்பு 500 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் கோரிக்கைக் கடிதங்களில் கூறப்பட்டுள்ளது. ta_5028264_3 இதற்கமைய, இரண்டு கட்டுரைகளால் ஏற்பட்ட பாதிப்புக்கான நட்ட ஈடாக ஒரு பில்லியன் ரூபாவை கரு ஜயசூரியவிற்கு வழங்குமாறு 2014 மார்ச் 26 ஆம் திகதியிடப்பட்ட கோரிக்கைக் கடிதங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. ta_5028264_4 இந்த நட்ட ஈட்டினை இரண்டு வாரங்களுக்குள் செலுத்துவதற்கு சிலோன் நியூஸ் பேப்பர்ஸ் தனியார் நிறுவனம் தவறினால், ஏற்பட்ட பாதிப்பை ஈடு செய்வதற்காக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக  கோரிக்கைக் கடிதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.