அஃகமும்‌ காசும்‌ சிக்கெனத்‌ தேடு. அஃகம்‌ சுருக்கேல்‌. அகங்கையிற்‌ போட்டுப்‌ புறங்கையை நக்கலாமா? அகட விகடமாய்ப்‌ பேசுகிறான்‌. அகதிக்கு ஆகாசமே துணை. அகதிக்குத்‌ தெய்வமே துணை. அகதி சொல்‌ அம்பலம்‌ ஏறாது. அகதி தலையிற்‌ பொழுது விடிந்தது. அகதி பெறுவது பெண்பிள்ளை, அதுவும்‌ வெள்ளிபூராடம்‌. அகதியைப்‌ பருதி கேட்கிறதா? அகத்தி ஆயிரம்‌ காய்த்தாலும்‌ புறத்தி புறத்தியே. அகத்தின்‌ அழகு முகத்தில்‌ தெரியும்‌. அகத்துக்‌ கழகு ஆமுடையான்‌. அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துச்சனி, ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம்‌ இடத்து ராஜா. அகப்பட்டுக்கொள்வேன்‌ என்றோ கள்ளன்‌ களவெடுக்‌கிறது? அகப்பை குறைந்தால்‌ கொழுப்பெல்லா மடங்கும்‌. அகப்பை பிடித்தவன்‌ தன்னவனானால்‌, அடிப்பந்தியில்‌ இருந்தாலென்ன, கடைப்பந்தியில்‌ இருந்தாலென்ன? அகம்‌ ஏறச்‌ சுகம்‌ ஏறும்‌. அகம்‌ மலிந்தால்‌ அஞ்சும்‌ மலியும்‌. அகம்‌ குறைந்தால்‌ அஞ்சும்‌ குறையும்‌. அகம்‌ மலிந்தால்‌ எல்லாம்‌ மலியும்‌, அகம்‌ குறைந்தால்‌ எல்லாம்‌ குறையும்‌. அகல இருந்தால்‌ நிகள உறவு, கிட்டவந்தால்‌ முட்டப்‌ பகை. அகல இருந்தால்‌ பகையும்‌ உறவாம்‌. அகல இருந்தால்‌ புகல உறவு. அகல இருந்து செடியைக்‌ காக்கிறது. அகல உழுகிறதைவிட ஆழ உழுகிறது சிலாக்கியம்‌. அகல்வட்டம்‌ பகல்‌ மழை. அகவிலை அறியாதவன்‌ துக்கம்‌ அறியான்‌. அகழிலே விழுந்த முதலைக்கு அதுவே வைகுண்டம்‌. அகா நாக்காய்ப்‌ பேசுகிறான்‌. அகாரியத்தில்‌ பகீரதப்‌ பிரயத்தனம்‌ பண்ணுறது. அகிருத்தியம்‌ செய்கிறவன்‌ முகத்தில்‌ விழிக்கிறதா? அகிலுந்‌ திகிலுமாக. அகோர தபச விபரீத சோரன்‌. அகோர தபசி விபரீத நிபுணன்‌. அக்கச்சி உடைமை அரிசி தங்கச்சி உடைமை தவிடா? அக்கரைப்பாகலுக்கு இக்கரைக்‌ கொழுகொம்பு. அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை. அக்கறை தீர்ந்தால்‌ அக்காள்‌ முகடு குக்கா. அக்கன்னா அரியன்னா, நோக்குவந்த விதியென்ன? அக்காடு வெட்டிப்‌ பருத்தி விதைக்கிறேன்‌ என்றால்‌, அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான்‌ பிள்ளை; அதற்கு அப்பன்‌ கைகால்‌ பட்டுக்‌ கிழியப்போகிறது மடித்துப்‌ பெட்டியிலேவை யென்கிறான்‌. அக்காடு வெட்டிப்‌ பருத்தி விதைத்தால்‌, அப்பா முழச்‌ சிற்றாடை என்கிறதாம்‌ பெண்‌. அக்காள்‌ இருக்கிறவரையில்‌ மச்சான்‌ உறவு. அக்காள்‌ உண்டானால்‌, மச்சான்‌ உண்டு. அக்காள்‌ உறவும்‌ மச்சான்‌ பகையுமா? அக்காளைக்‌ கொண்டால்‌, தங்கையை முறைகேட்பானேன்‌? அக்காள்‌ தான்‌ கூடப்பிறந்தான்‌, மச்சானும்‌ கூடப்பிறந்‌தானா? அக்காளைப்பழித்துத்‌ தங்கை அபசாரியானாள்‌. அக்காளைப்பழித்துத்‌ தங்கை மோசம்போனான்‌. அக்கியானம்‌ தொலைந்தால்‌ அவிழ்தம்‌ பலிக்கும்‌. அக்கிராரத்தில்‌ பிறந்தாலும்‌, நாய்‌ வேதம்‌ அறியுமா? அக்கிராரத்துக்கு ஒரு ஆடு செத்தால்‌ ஆளுக்கு ஒரு மயிர்‌. அக்கிராரத்து நாய்‌ பிரதிஷ்டைக்கு அழுததுபோல. அக்கிராரத்து நாய்க்கு அகவிலை தெரியுமா? அக்கினிதேவனுக்கு அபிஷேகம்‌ செய்ததுபோல்‌ இருக்கிறான்‌. அக்கனிப்பந்தலிலே வெண்ணெய்ப்பதுமை ஆடுமா? அக்கினி மலையிலே கர்ப்பூரபாணம்‌ பிரயோகித்தது போல. அக்கினியைத்தின்று கக்குகிறபிள்ளை, அல்லித்தண்டைத்‌ தின்கிறது அதிசயமா? அக்கினியாற்‌ சுட்ட புண்‌ விஷமிக்காது. அக்குத்‌ தொக்கு இல்லாதவனுக்குத்‌ துக்கம்‌ ஏது? அக்குத்தொக்கில்லாதான்‌ ஆண்மையும்‌, வெட்கஞ்‌சிக்‌கல்லாதான்‌ தோஷமும்‌, மிக்கத்‌ துக்கப்படாதான்‌ வாழ்வும்‌ நாய்‌ கக்கி நக்கித்‌ தின்னத்துக்‌ கொக்கும்‌. அங்கங்கு குறுணி அளந்துகொட்டி இருக்கிறது. அங்கத்திலே குறைச்சலில்லை ஆட்டடா பூசாரி. அங்கத்தை ஆற்றில்‌ அலைசொணாதா? அங்கத்தைக்‌ கொண்டுபோய்‌ ஆற்றில்‌ அலசினாலும்‌ தோஷம்‌ இல்லை. அங்கத்தைக்‌ கொன்று ஆற்றில்‌ சேர்க்கவொண்ணாது. அங்காங்கு வைபோகமாயிருக்கிறான்‌, இங்கேபார்த்தால்‌ அரைக்காசு முதலும்‌ இல்லை. அங்காடி விலையை அதிர அடிக்காதே. அங்காடிக்காரியைச்‌ சங்கீதம்‌ பாடச்சொன்னால்‌, வெங்‌காயம்‌ கரிவேப்பிலை என்பாள்‌. அங்காளம்மைத்‌ தெய்வம்‌ அகப்பைக்கூறு வழியாய்‌ வரும்‌. அங்கிடு தொடுப்பிக்கு அங்கிரண்டு குட்டு, இங்கிரண்டு சொட்டு. அங்கும்‌ இருப்பான்‌ இங்கும்‌ இருப்பான்‌, ஆக்கின சோற்றுக்குப்‌ பங்கும்‌ இருப்பான்‌. அங்கும்‌ தப்பி இங்கும்‌ தம்பி அகப்பட்டுக்கொண்டான்‌ தும்மட்டிப்பட்டன்‌ (திம்மட்டிராயண்‌). அங்கே போனேனோ செத்தேனோ. அங்கேண்டி மகளே கஞ்சிக்கு அழுகிறாய்‌? இங்குவாடி காற்றாய்ப்‌ பறக்கலாம்‌. அசத்துக்கு வாழ்க்கைப்பட்டு ஆயிரம்‌ வருஷம்‌ வாழ்‌வதைவிட சத்துக்கு வாழ்க்கைப்பட்டுச்‌ சட்டென்று தாலியறுப்பதே மேல்‌. அசலார்‌ உடைமைக்குப்‌ பேயாய்ப்‌ பறக்கிறது. அசலார்‌ குற்றம்போல்‌ தன்‌ குற்றம்‌ பார்த்தால்‌ தீதுண்‌டோ மன்னுயிர்க்கு? அசலிலே பிறந்த கசுமாலம்‌. அசலும்‌ பிசலும்‌ அறியாமல்‌ அடுத்தாரைக்‌ கெடுக்கப்‌பார்க்கிறான்‌. அசல்‌ வாழ்ந்தால்‌ ஐந்துநாள்‌ பட்டினி கிடப்பாள்‌. அசல்‌ வீடு வாழ்ந்தால்‌ பரதேசம்‌ போகிறதா? அசல்‌ வீட்டான்பின்ளை ஆபத்துக்குதவுவானா? அசல்‌ வீட்டுக்காரனுக்குப்‌ பரிந்துகொண்டு ஆமுடையானை அடித்தாளாம்‌. அசல்‌ வீட்டுக்குப்போகிற பாம்மைப்‌ கையாலே பிடிக்கான்‌ அசல்‌ வீட்டுப்‌ பிராமணா, பாம்மைப்‌ பிடி, அல்லித்‌தண்டுபோலக்‌ குளிர்ந்திருக்கும்‌. அசவாப்‌ பயிரும்‌, கண்டதே உறவும்‌. அசுணமாச்‌ செவிப்‌ பறை அடுத்ததுபோலும்‌. அசைந்துதின்கிறது மாடு அசையாமல்தின்கிறது வீடு. அசைப்புக்கு ஆயிரம்பொன்‌ வாங்குகிறது. அசைவிருந்தால்‌ விட்டுப்போகமாட்டான்‌. அச்சம்‌ அற்றவன்‌ அம்பலம்‌ ஏறுவான்‌. அச்சம்‌ ஆண்மை குலைக்கும்‌. அச்சாணி அன்னதோர்‌ சொல்‌. அச்சாணி இல்லாத்‌ தேர்‌ முச்சாணும்‌ ஓடாது. அச்சிக்குப்‌ போனாலும்‌, அகப்பை அரைக்காசு. அச்சியிலும்‌ பிச்சைக்காரன்‌ உண்டு. அச்சியென்றால்‌ உச்சி குளிருமா? அழுவணம்‌ (ஐவணம்‌) என்றால்‌ கை சிவக்குமா? அச்சில்லாத்‌ தேர்‌ ஓடவும்‌ ஆழுடையான்‌ இல்லாதவள்‌ பிள்ளை பெறவும்‌ கூடுமா? அச்சு ஒன்றா வேறா? அஞ்சலிவந்தனம்‌ ஆருக்கும்‌ நன்மை. அஞ்சனக்காரன்‌ முதுகில்‌ வஞ்சனைக்காரன்‌ ஏறினான்‌. அஞ்சா நெஞ்சு படைத்தால்‌ ஆருக்கு ஆவான்‌? அஞ்சாவது பெண்‌ கெஞ்சினாலும்‌ கிடையாது. அஞ்சி ஆண்மை செய்யவேணும்‌. அஞ்சி நடக்கிறவளுக்குக்‌ காலமல்ல. அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா? அஞ்சிலே பிஞ்சிலே கொஞ்சாமல்‌, அறுபதிற்குமேல்‌ கொஞ்சினானாம்‌. அஞ்சில்‌ அறியாதவன்‌ ஐம்பதில்‌ அறிவானா? அஞ்சினவனைக்‌ குஞ்சும்‌ வெருட்டும்‌. அஞ்சினவனைப்‌ பேய்‌ அடிக்கும்‌. அஞ்சினவன்‌ கண்ணுக்கு ஆகாசமெல்லாம்பேய்‌. அஞ்சினாரைக்‌ கெஞ்சுவிக்கும்‌, அடித்தாரை வாழ்விக்கும்‌. அஞ்சு காசுக்குக்‌ குதிரையும்‌ வேண்டும்‌, அதுவும்‌ ஆற்றைக்‌ கடக்கப்‌ பாயவும்‌ வேண்டும்‌. அஞ்சு குஞ்சும்‌ கறியாமோ, அறியாப்‌ பெண்ணும்‌ பெண்டாமோ? அஞ்சுகதவும்‌ சாத்தியிருக்க, ஆமுடையான்‌ வாயிலே பேணவளார்‌? அஞ்சுக்கு அறுகு கிள்ளப்போனவன்‌, திரட்டிக்குக்‌ கொண்டுவந்தானாம்‌. அஞ்சுக்கு இரண்டு பழுதில்லை. அஞ்சு பணம்‌ கொடுத்தாலும்‌, அத்தனை ஆத்திரம்‌ ஆகாது. அஞ்சுபணங்‌ கொடுத்துத்‌ கஞ்சித்தண்ணீர்‌ குடிப்பானேன்‌? அஞ்சு பெண்‌ பிறந்தால்‌ அரசனும்‌ ஆண்டியாவான்‌. அஞ்சும்‌ இருக்கிறது நெஞ்சுக்குள்ளே, அதுவுமிருக்கிறது புந்திக்குள்ளே. அஞ்சுரு ஆணியில்லாத்தேர்‌ அசைவதரிது. அஞ்சுபொன்னும்‌ வாங்கார்‌ அரைப்பணமே போதுமென்பார்‌. அஞ்சும்‌ மூன்றும்‌ உண்டானால்‌, அறியாச்‌ இறுக்கியும்‌ கறியாக்குவாள்‌. (பெண்ணாவாள்‌) அஞ்சுருவுத்தாலி நெஞ்சுருவக்கட்டிக்‌ கொண்டு வந்தாற்போல்‌ வலக்காரமாய்ப்‌ பேசுகிறாய்‌. அஞ்சு வயதுப்‌ பிள்ளைக்கு ஐம்பது வயதுப்‌ பெண்‌ கால்‌ முடக்கவேண்டும்‌. அஞ்சுவோரைக்‌ கெஞ்சடிக்கப்‌ பார்க்கிறான்‌. அஞ்சூர்ச்சண்டை சிம்மாளம்‌, ஐங்கல அரிச ஒரு கவளம்‌. அஞ்செழுத்தும்‌ பாவனையும்‌ அப்பனைப்போல்‌ (அவனைப்போல்‌) இருக்கிறது. அடக்கத்துப்‌ பெண்ணுக்கு அழகேன்‌? அடக்கமே பெண்ணுக்கு அழகு. அடக்கம்‌ ஆயிரம்பொன்‌ தரும்‌. அடக்கம்‌ உடையார்‌ அறிஞர்‌, அடங்காதார்‌ கல்லார்‌. அடக்குவாரற்ற கழுக்காணி. அடக்குவாரற்ற கழுக்காணியும்‌ கொட்டுவாரற்ற மேளமுமாய்த்‌ திரிகிறான்‌. அடங்காத மனைவியும்‌ ஆங்கார புருஷனும்‌. அடங்காப்‌ பாம்பிற்கு ராஜா மூங்கில்தடி. அடங்காப்பிடாரியைப்‌ பெண்டுவைத்துக்‌ கொண்டது போல்‌. அடங்காப்‌ பெண்சாதியால்‌ அத்தைக்கும்‌ நமக்கும்‌ பொல்லாப்பு. அடங்காமாட்டுக்கு அரசன்‌ மூங்கில்‌ தடி. அடங்கினபிடி பிடிக்கவேண்டுமேயல்லாமல்‌, அடங்காப்‌பிட பிடிக்கலாகாது. அடம்பங்கொடியும்‌ திரண்டால்‌ மிடுக்கு. அடா என்பான்‌, வெளியே புறப்படான்‌. அடாது செய்தவன்‌ படாது படுவான்‌. அடி அதிரசம்‌ (ஆலங்காய்), குத்து கொழுக்கட்டை. அடி உதவுகிறதுபோல அண்ணன்‌ தம்பி உதவார்‌. அடி என்கப்‌ பெண்சாதியில்லை, அஷ்ட புத்திரவெகு பாக்கிய நமஸ்து அடி என்கிற மந்திரியுமில்லை பிடி என்கிற ராஜனுமில்லை. அடி ஒட்டலே கரணம்‌ போடப்பார்க்கிறான்‌. அடி ஒட்டையா யிருந்தாலும்‌ கொழுக்கட்டை வேக வேண்டியதுதானே அடிக்க அடிக்கப்‌ பந்து அதிக விசைகொள்ளும்‌ அடிக்காயிரம்‌ பொன்‌ கொடுக்கவேண்டும்‌. அடிக்கிற காற்றுக்கும்‌ பெய்கிற மழைக்கும்‌ பயப்படு. அடிக்கிற காற்று வெயிலுக்குப்பயப்படுமா? அடிக்கும்‌ ஒரு கை, அணைக்கும்‌ ஒரு கை. அடிக்கும்‌ காற்றிலே எடுத்துத்‌ தூற்றவேண்டும்‌. அடிக்கும்‌ பிடிக்கும்‌ சரி. அடி செய்கிறது அண்ணன்‌ தம்பி செய்யார்‌. அடிச்சட்டிக்குன்ளே கரணம்‌ போடலாமா? அடித்த இடம்‌ கண்டுபிடித்தழ ஆறு மாசம்‌ செல்லும்‌. அடித்த ஏருக்கும்‌ குடித்த கூழுக்கும்‌ சரி. அடித்தது ஆட்டம்‌ பிடித்தது பெண்டு. அடித்தாலும்‌ புருஷன்‌ புடைத்தாலும்‌ புருஷன்‌. அடித்துப்‌ பழுத்ததும்‌ பழமா? அடித்துப்‌ பால்‌ புகட்டுகிறதா? அடித்து வளர்க்காத பிள்ளையும்‌ முறுக்கி வளர்க்காத மீசையும்‌ செவ்வையாகா. அடித்து விட்டவன்‌ பின்னே போனாலும்‌, பிடித்து விட்டவன்‌ பின்னே போகலாகாது. அடிநாக்கிலே நஞ்சும்‌ நுனிநாக்கிலே அமிர்தமுமா? அடி நொச்சி நுனி ஆமணக்கா? அடிப்பானேன்‌ பிடிப்பானேன்‌ அடக்குகிற வழியில்‌ அடக்குவோம்‌. அடிமேல்‌ அடி அடித்தால்‌, அம்மியும்‌ நகரும்‌ அடிமை படைத்தால்‌ ஆள்வது கடன்‌. அடியற்ற பனை போல்‌ விழுந்தான்‌. அடியற்ற மரம்போல அலறிவிழுகிறது. அடியற்றால்‌ நுனி விழாமலிருக்குமா? அடியாத மாடு படியாது. அடியிலுள்ளது நடுவுக்கும்‌ முடிக்கும்‌ உண்டு. அடியும்‌ நுனியும்‌ தறித்த கட்டையபோல. அடியும்‌ பட்டுப்‌ புளித்த மாங்காயா தின்னவேண்டும்‌? அடி யென்று அழைக்கப்‌ பெண்டாட்டி, இல்லை, பிள்ளை எத்தனை பெண்‌ எத்தனை என்கிறான்‌. அடியைப்பிடிடா பாரதபட்டா. அடி யொட்டி யல்லா மேற்கரணம்‌ போடவேணும்‌? அடிவானம்‌ கறுத்தால்‌, ஆண்டை வீடு வறுக்கும்‌. அடிவண்டிக்‌ கடாப்போலே. அடிவயிற்றிலே இடிவிழுந்தாற்போல. அடுக்களைக்‌ இணற்றிலே அமுதம்‌ எழுந்தாற்போல. அடுக்களைக்‌ குற்றம்‌ திருப்பால்‌ குழைந்தது, ஆமுடையான்‌ குற்றம்‌ பெண்ணாகப்‌ பிறந்தது. அடுக்களைக்கு ஒரு பெண்ணும்‌ அம்பலத்துக்கு ஒரு ஆணும்‌ இருக்கிறதென்கிறான்‌. அடுக்களைப்‌ பூனைபோல்‌ இடுக்கிலே ஒளிக்கிறது. அடுக்களைப்‌ பெண்களுக்கு அழகுவேண்டுமா? அடுக்குகிற அருமை உடைக்கிற நாய்க்குத்‌ தெரியுமா? அடுக்குகிற வருத்தம்‌ உடைக்கிறதுக்குத்‌ தெரியாது. அடுத்த கூரை வேவுங்கால்‌ தன்‌ கூரைக்கு மோசம்‌. அடுத்ததன்‌ தன்மை ஆன்மாவாகும்‌. அடுத்தது காட்டும்‌ பளிங்கதுபோல, (நெஞ்சில்‌) கடுத்‌தது காட்டும்‌ முகம்‌. அடுத்தவரை அகல விடலாகாது. அடுத்தவனைக்‌ கெடுக்கலாமா? அடுத்தவன்‌ வாழ்வைப்‌ பகலே குடி கெடுப்பான்‌. அடுத்த வீட்டுக்காரி பின்ளை பெற்றாளென்று அம்மிக்‌குழவி யெடுத்துக்‌ குத்தக்கொண்டாளாம்‌. அடுத்தாரைக்‌ கெடுத்து அன்னம்‌ இட்டாரைக்‌ கன்னம்‌ இடுகிறான்‌. அடுத்து அடுத்துச்‌ சொன்னால்‌ தொடுத்துக்‌ கெடுப்பான்‌ மடந்தை. அடுத்து வந்தவர்க்கு ஆதரவு சொல்வோன்‌ குரு. அடுப்பனலில்‌ வெண்ணெயை வைத்த கதை. அடுப்பு எரிந்தால்‌ பொரி பொரியும்‌. அடுப்புக்‌ கட்டிக்கு அழகு வேண்டுமா? அடுப்புநெருப்பும்‌ போய்‌ வாய்த்தவிடும்‌ போச்சு. அடுத்த வீட்டுக்காரனுக்‌ கதிகாரம்‌ வந்தால்‌ அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல்‌ லாபம்‌, அடுத்த வீட்டுக்காரனுக்கு அதியோகம்‌ வந்தால்‌ அண்‌டை வீடு குதிரை லாயம்‌. அடுத்துமுயன்றாலும்‌ ஆகுநாள்தான்‌ ஆகும்‌. அடே அத்தான்‌, அத்தான்‌, அம்மான்‌ பண்ணினாற்‌ போலிருக்கவில்லை அடா. அடைந்தோரை ஆதரி. அடைபட்டுக்‌ இடக்கிறான்‌ செட்டி, அவனை அழைத்து வா பணம்பாக்கி என்கிறான்‌ பட்டி. அடையலரை அடுத்து வெல்லு. அடைப்பைப்‌ பிடுங்கினால்‌ பாம்பு கடிக்கும்‌. அடைமழைக்குள்ளே ஓர்‌ ஆட்டுக்குட்டி செத்தது போல. அடைமழை விட்டும்‌ செடிமழை விடவில்லை. அஷ்ட தரித்திரம்‌ தாய்‌ வீடு, அதிலும்‌ தரித்திரம்‌ மாமியார் வீடு. அஷ்டதரித்திரம்‌ பிடித்தவன்‌ அமராவதியில்‌ வாழ்கிறானென்று நித்திய தரித்திரம்‌ பிடித்தவன்‌ நின்றநிலையிலே பிட்டுக்கொண்டு வந்தான்‌. அட்டமத்துச்‌ சனி கிட்டவந்தது போல. அட்டமத்துச்‌ சனி நட்டம்‌ வரச்செய்யும்‌. அட்டமத்துச்‌ சனி பிடித்தது, பிட்டத்துத்‌ துணியையும்‌ உரிந்துகொண்டது. அட்டமத்துச்‌ சனியை வட்டிக்கு வாங்கினாற்போல. அட்டாதுட்டி கொள்ளித்தேன்‌. அட்டாலும்‌ பால்‌ சுவையில்‌ குன்றாது அட்டைக்கும்‌ திருத்தியில்லை, அக்கினிக்கும்‌ திருத்தியில்லை. அட்டையை எடுத்து மெத்தையில்‌ வைத்தாலும்‌ செத்‌தையைச்‌ செத்தையை நாடும்‌. அட்டையைப்‌ பிடித்து மெத்தையில்‌ வைத்ததுபோல. அணி பூண்ட நாய்போல. அணியத்திலே கிழிஞ்சாலும்‌ கிழிஞ்சுது, அமரத்திலே இழிஞ்சாலும்‌ கிழிஞ்சது. அணில்‌ ஊணும்‌, ஆமை நடையும்‌. அணில்‌ எஏறவிட்ட நாய்‌ (பார்ப்பது) போல அணில்‌ கொப்பிலும்‌, ஆமை கிணற்றிலும்‌. அணில்‌ நொட்டினதும்‌ தென்னமரம்‌ வீழ்ந்ததும்‌. அணு மகா மேரு ஆமா? அணிற்பிள்ளைக்கு நுங்கு அரிதோ, ஆண்டிச்சி பிள்ளைக்கு சோறு அரிதோ? அணுவும்‌ மலையாச்சு, மலையும்‌ அணுவாச்சு. அணை கடந்த வெள்ளம்‌ அழுதாலும்‌ வராது. அணை கடந்த வெள்ளத்தை மறிப்பவர்‌ ஆர்‌? அண்டங்காக்காய்‌ குழறுகிறாப்போல. அண்டத்தில்‌ இல்லாததும்‌ பிண்டத்தில்‌ உண்டா? அண்டத்திற்கு உன்ளது பிண்டத்திற்கும்‌ உண்டு. அண்டத்துக்கொத்தது பிண்டத்துக்கு. அண்டத்தைச்‌ சுமக்கிறவனுக்குச்‌ சுண்டைக்காய்‌ பாரமா? அண்டத்தைக்‌ கையில்‌ வைத்தாட்டும்‌ பிடாரிக்குச்‌ சுண்டைக்காய்‌ எடுப்பது பாரமா? அண்ட நிழலில்லாமற்போனாலும்‌ பேர்‌ ஆலாலவிருக்ஷம்‌ அண்டை அயல்‌ பார்த்துப்‌ பேசுகிறது. அண்டமும்‌ பிண்டமும்‌, அந்தரங்கமும்‌ வெளியரங்கமும்‌. அண்டர்‌ எப்படியோ தொண்டரும்‌ அப்படியே. அண்டாத பிடாரி ஆருக்கு அடங்குவாள்‌? அண்டைமேலே கோபம்‌ கடாவின்‌ மேலே காட்டினதுபோல. அண்டையிற்‌ சமர்த்தன்‌ இல்லாத ராஜாவுக்கு அபகீர்த்தி வரும்‌ அண்டை வீட்டுக்‌ கடனும்‌ பிட்டத்துச்‌ சிரங்கு மாகாது. அண்டை வீட்டுக்காரி பின்ளைபெற்றாளென்று அசல்‌ வீட்டுக்காரி இடித்துக்‌ கொண்டதுபோல. அண்டை வீட்டுச்‌ சண்டை கண்ணுக்குக்‌ குளிர்ச்சி அண்டை வீட்டுச்‌ சுப்பிக்கும்‌ எதிர்வீட்டுக்‌ காமாட்சிக்குமா கவலை? அண்டை வீட்டுப்‌ பார்ப்பான்‌ சண்டை மூட்டித்‌ தீர்ப்பான்‌ அண்ணனார்‌ சேனையிலே அன்ளி உண்ணப்போகிறாள்‌. அண்ணனிடத்தில்‌ ஆறுமாதம்‌ வாழ்ந்தாலும்‌ அண்ணியிடத்தில்‌ அரை நாழிகை வாழலாமா? அண்ணனானவன்‌ தம்பிக்கு மூத்தவன்‌; அண்ணனுக்குத்‌ தம்பி அல்லவென்று போகுமா? அண்ணனுக்குப்பெண்‌ பிறந்தால்‌ அத்தை அசல்‌ நாட்டாள்‌. அண்ணற ஆயிரம்‌ பொன்னிலும்‌ நிண்ணற ஓருகாசு பெரிது. அண்ணனைக்‌ கொன்றபழி, சந்தையிலே தீர்த்துக்கொள்ளுகிறதுபோல அண்ணன்‌ உண்ணாதது எல்லாம்‌ மைத்துனிக்கு லாபம்‌. அண்ணன்‌ கொம்பு பம்பள பளாச்சு. அண்ணன்‌ சம்பாதிக்கிறது, தம்பி அரைஞாண்‌ கயிற்‌றுக்குச்‌ சரி. அண்ணன்‌ தம்பிதான்‌ சென்மப்‌ பகையாளி. அண்ணன்‌ தம்பி வேண்டும்‌ இன்னம்‌ தம்பிரானே அண்ணன்தான்‌ கூடப்‌ பிறந்தான்‌ அண்ணியும்‌ கூடப்‌ பிறந்தாளோ? அண்ணன்‌ பெரியவன்‌, அப்பா, காலைப்பிடி. அண்ணன்‌ பெரியவன்‌, சிற்றப்பா, சுருட்டுக்கு நெருப்புக்‌ கொண்டுவா. அண்ணன்பேரிலிருந்த கோபத்தை நாய்பேரிலாற்றினான்‌. அண்ணாக்கும்‌ தொண்டையும்‌ அதிர அடைத்தது. அண்ணாணங்கை அப்ஸரஸ்திரீ. அண்ணாண்டி, வாரும்‌, சண்டையை ஒப்புக்கொள்ளும்‌. அண்ணாமலையாருக்கு அறுபத்துநாலுபூசை, ஆண்டிகளுக்கு எழுபத்துநாலு பூசை. அண்ணாமலையார்‌ அருளுண்டானால்‌ மன்னார்சாமி மயிரைப்‌ பிடுங்குமா? அண்ணாவி பிள்ளைக்குப்‌ பணம்‌ பஞ்சமா, அம்பட்டன்‌ பிள்ளைக்கு மயிர்‌ பஞ்சமா? அண்ணாவுக்கு மனது வரவேணும்‌, மதனி பிள்ளை பெறவேணும்‌. அதமனுக்கு ஆயிரம்‌ ஆயுசு. அதிக ஆசை அதிக நஷ்டம்‌. அதிக ஆசை மிக தரித்திரம்‌. அதிக கரிசனமானாலும்‌ ஆமுடையானை அப்பா என்றழைக்கிறதா? அதிகார மில்லாவிட்டால்‌ பரியாரம்‌ வேணும்‌. அதிகாரியுடனே எதிர்பண்ணலாமா? அதிகாரியும்‌ தலையாரியும்கூடி விடியுமட்டும்‌ திருடலாம்‌ அதிகாரி வீட்டில்‌ திருடித்‌ தலையாரி வீட்டில்‌ வைத்‌ததுபோல. அதிகாரி வீட்டுக்‌ கோழிமுட்டை குடியானவன்‌ வீட்டு அம்மியை உடைத்ததாம்‌ அதிக்கிரமமான ஊரிலே கொழிக்திற மீனும்‌ சரிக்கு மாம்‌. அதிசயமான ரம்பை அரிசி கொட்டுகிற தொம்பை அதியாக்‌ குறியால்‌ கருமாரிப்‌ பாய்ச்சல்‌. அதிர அடித்தால்‌ உதிர விளையும்‌ அதிரந்‌ தடித்தாருக்கு ஐயருமில்லை, பிடாரியாருமில்லை. அதிருஷ்டமும்‌ ஐசுவரியமும்‌ ஒருவர்‌ பங்கல்ல. அதிருஷ்டம்‌ ஆறாய்ப்‌ பெருகுகிறது அதிருஷ்டம்‌ இருந்தால்‌ அரசு பண்ணலாம்‌. அதிருஷ்டம்‌ இல்லாதவனுக்கு கலப்பால்‌ வந்தாலும்‌, அதையும்‌ பூனை குடிக்கும்‌. அதிருஷ்டம்‌ கெட்ட கழுக்காணி. அதிருஷ்டம்கெட்டதுக்கு அறுபதுநாழியும்தியாச்சியம்‌. அதிருஷ்டவான் மண்ணைத்தொட்டாலும்‌ பொன்னாகும்‌. அதிலே குறைச்சல்‌ இல்லை ஆட்டடா மணியை பூசாரி. அதிலேயும்‌ இது புதுமை, அவள்‌ செத்தது மெத்த அருமை அதின்‌ கையை எடுத்து அதின்‌ கண்ணிலே குத்துகிறது அது அதற்கு ஓருகவலை, ஐயாவுக்கு எட்டுக்கவலை. அதுவும்‌ போதாதென்று அழலாமா இனி? அதுக்கு இட்ட காக மினக்கெட்டு அரிவாள்‌ மணைக்குச்‌ சுறுக்கிட்டதா? அதெல்லாம்‌ உண்டிட்டு வாவென்பாள் அதைக்‌ கைகழுவ வேண்டியதுதான்‌. அதை நான்‌ செய்யாதேபோனால்‌ என்‌ மீசையை எடுத்துவிடுகிறேன்‌ அதைரிய முள்ளவனை அஞ்சாத வீரன்‌ என்றாற்போல. அதை விட்டாலும்‌ கதியில்லை. அப்புறம்‌ போனாலும்‌ விதியில்லை அஸ்த செவ்வானம்‌ அடைமழைக்கு லக்ஷணம்‌. அத்தம்‌ மிகுதி அல்லவோ அம்பட்டன்‌ பெண்கேட்க வந்தது. அத்தனையும்‌ நேர்ந்தான்‌ உப்பிட மறந்தாள்‌. அத்தான்‌ செத்தால்‌ மயிராச்சு, கம்பளி மெத்தை நமக்காச்சு. அத்திக்‌ காயைப்‌ பிட்டுப்‌ பார்த்தால்‌ அங்கும்‌ இங்கும்‌ பொள்ளல்‌. அஸ்தி சகாந்தரம்‌ என்கிறது போலிருக்கிறது. அத்தி பூத்தாற்‌ போல்‌ (இருக்கிறது). அத்திப்‌ பழத்தைப்‌ பிட்டுப்பார்த்தால்‌ அத்தனையும்‌ புழு. அத்திப்‌ பூவை ஆர்‌ அறிவார்கள்‌. அத்திப்‌ பூவைக்‌ கண்டவர்கள்‌ உண்டா, ஆந்தைக்‌ குஞ்சைப்‌ பார்த்தவர்கள்‌ உண்டா? அத்தி மரத்திலே தொத்திய கனி போல. அஸ்தியிலே ஜ்வரம்‌. அத்து மீறிப்‌ போனான்‌, பித்துக்‌ கொள்ளி ஆனான்‌. அத்தைக்கு மீசை முளைத்தால்‌ சிற்றப்ப என்கலாம்‌. அத்தைக்‌ கொழியப்‌ பித்தைக்‌ கில்லை ஒளவையாரிட்ட சாபத்‌ தீடு. அத்தைத்தான்‌ சொல்வானேன்‌ வாயைத்தான்‌ வலிப்‌பானேன்‌ (நோவானேன்‌)? அத்தை மகள்‌ அம்மான்‌ மகள்‌ சொந்தம்‌ போல. அத்தை மகளானாலுஞ்‌ சும்மா வருமா? அத்தோடே நிண்ணுது அலைச்சல்‌, கொட்டோடே நிண்ணுது குலைச்சல்‌. அந்த ஊர்‌ மண்‌ மிதிக்கவே தன்னை மறந்து விட்டான்‌. அந்தணர்க்குத்‌ துணை வேதம்‌. அந்தணர்‌ மனையிற்‌ சந்தனம்‌ மணக்கும்‌. அந்தப்‌ பருப்பு இங்கே வேகாது. அந்தம்‌ சிந்தி அழகு ஒழுகுகிறது. அந்தரத்தில்‌ கோல்‌ எறிந்த அந்தகனைப்‌ போல. அந்தலை கெட்டுச்‌ சிந்தலை மாறிக்‌ இடக்கு. அந்த வெட்க்க்கேட்டை (வெட்கத்தை) ஆரோடே சொல்லுகிறது? அந்தி ஈசல்‌ பூத்தால்‌ அடைமழை அதிகரிக்கும்‌. அந்திப்‌ பீ சந்திப்‌ மீ பேலாதான்‌ வாழ்க்கை சாமப்‌ பீ தட்டி எழுப்பும்‌. அந்திமழை அழுதாலும்‌ விடாது. அந்துக்கண்ணிக்கு அழுதாலும்‌ வாரானாம்‌ ஆமுடையான்‌. அந்தாது நெல்லானேன்‌. அபத்த பஞ்சாங்கத்துக்கு அறுபது நாழியும்‌ தியாச்சியம்‌. அப்பச்சி குதம்பையைச்‌ சூப்பப்‌ பிள்ளை முற்றின தேங்காய்க்கு அழுகிறது போல. அப்பச்சி கோவணத்தைப்‌ பருந்துகொண்டோடுகிறது, பிள்ளை வீரவாளிப்‌ பட்டுக்கு அழுகிறது. அப்பத்தை எப்படிச்‌ சுட்டாளோ, தித்திப்பை எப்படி நுழைத்தாளோ? அப்பம்‌ என்றாற்‌ பிட்டுக்‌ காட்ட வேண்டுமா? அப்பம்‌ சுட்டது சட்டியில்‌, அவல்‌ இடித்தது திட்டையில்‌. அப்பம்‌ சுட்டது திட்டையிலே, அவல்‌ இடித்தது சட்டியிலே. அப்பனோடே போகிறவளுக்கு அண்ணன்‌ ஏது தம்பி ஏது? அப்பன்‌ அருமை அப்பன்‌ மாண்டால்‌ தெரியும்‌, உப்பின்‌ அருமை உப்பு இல்லாவிட்டால்‌ தெரியும்‌. அப்பன்‌ செத்தும்‌ தம்பிக்‌ கழுகிறதா? அப்பன்‌ சோற்றுக்‌ கழுகிறான்‌, பின்ளை கும்பகோணத்தில்‌ கோதானம்‌ செய்கிறான்‌. அப்பன்‌ பெரியவன்‌, சிற்றப்பா, சுருட்டுக்கு நெருப்புக்‌ கொண்டுவா. அப்பன்‌ அப்பா என்றால்‌ ரங்கா ரங்கா என்பான்‌. அப்பா என்றால்‌ உச்சி குளிருமா? அப்பாஜி உப்பில்லை. அப்பிடாவு மில்லை வெட்டுக்‌ கத்தியு மில்லை. அப்பியாசம்‌ குலவிருது. அப்பியாசம்‌ கூசாவித்தை. அப்பியாச வித்தைக்கு அழிவில்லை. அமரபட்சம்‌ பூர்வபட்சம்‌, கிருஷ்ண பட்சம்‌ சுக்கிலபட்சம்‌. அமரிக்கை ஆயிரம்‌ பெறும்‌. அமர்த்தனுக்கும்‌ காணிவேண்டாம்‌ சமர்த்தனுக்கும்‌ காணிவேண்டாம்‌. அமாவாசைக்‌ கருக்கலிலே பெருச்சாளி போனதெல்லாம்‌ வழி. அமாவாசைச்‌ சோறு சும்மா அகப்படுமா? அமாவாசைப்‌ பருக்கை என்றைக்கும்‌ அகப்படுமா? அமிஞ்சி உண்டோ, குப்புநாயக்கரே. அமிஞ்சிக்கு உழுதால்‌ சரியாய்‌ விளையுமா? அமுக்கொற்‌ போலிருந்து அரணை அழிப்பான்‌. அமுதம்‌ உண்கிற வாயால்‌ விஷம்‌ உண்பார்களா? அமுதுபடி பூச்சியம்‌, ஆடம்பரம்‌ அதிகம்‌. அமைச்சனில்லாத அரசும்‌, ஆமுடையானில்லாத ஆரிழையும்‌. அம்பட்டக்‌ கிருதும்‌, வண்ணார ஓயிலும்‌. அம்பட்டனை மந்திரித்‌ தனத்துக்கு வைத்துக்‌ கொண்டதுபோல. அம்பட்டன்‌ குப்பையைக்‌ கிளறினால்‌ மயிர்‌ மயிராய்ப்‌ புறப்படும்‌. அம்பட்டன்‌ கைக்‌ கண்ணாடி போல அம்பட்டன்‌ பல்லக்‌ கேறினது போல. அம்பட்டன்‌ பிள்ளைக்கு மயிர்‌ அருமையா? அம்பட்டன்‌ மாப்பிள்ளைக்கு மீசை ஒதுக்கினது போல அம்பலக்‌ கழுதை அம்பலத்திற்‌ கிடந்தாலென்ன, அடுத்த திருமாளிகையிற்‌ (திருமாளத்திற்‌) கிடந்தாலென்ன? அம்பலத்தில்‌ ஏறும்‌ பேச்சை அடக்கம்‌ பண்ணப்‌ பார்க்கிறான்‌. அம்பலத்தில்‌ கட்டுச்‌ சோறு அவிழ்த்தாற்‌ போல. அம்பலத்தில்‌ பொதி அவிழ்க்கலாகாது. அம்பலம்‌ வேகுது. அம்பாத்தூர்‌ வேளாண்மை யானைகட்டத்‌ தான்‌ வானமட்டும்‌ போர்‌, ஆறுகொண்டது பாதி தூறு கொண்டது பாதி. அம்பாணி தைத்தது போலப்‌ பேசுறான்‌. அம்பா பாக்கியம்‌ சம்பா விளைந்தது, பாவிபாக்கியம்‌ பதராய்‌ விளைந்தது. அம்பிகொண்டு ஆறுகடப்போர்‌ நம்பிக்கொண்டு நரிவால்‌ கொள்ளுவார்களா? அம்மண தேசத்தில்‌ கோவணங்‌ கட்டினவன்‌ பைத்தியக்காரன்‌. அம்மணமும்‌ இன்னலும்‌ ஆயுசுபரியந்தமா? அம்மா குதிர்போல, ஐயா கதிர்‌ போல. அம்ம கெட்ட கேட்டுக்கு முக்காடு ஒன்றா? அம்மா தெருளுவதற்கு முன்னே ஐயா உருளுவார்‌. அம்மாளுக்குத்‌ தமிழ்‌ தெரியாது, ஐயாவுக்கு வடுகு தெரியாது. அம்மானும்‌ மருமகனும்‌ ஒரு வீட்டுக்கு ஆள் அடிமை. அம்மான்‌ மகளுக்கு முறையா? அம்மான்‌ வீட்டு வெள்ளாட்டியை அடிக்க அதிகாரியைக்‌ கேட்கவேண்டுமா? அம்மி மிடுக்கோ அரைப்பவள்‌ மிடுக்கோ? அம்மிமிதித்து அருந்ததி பார்த்தது போலப்‌ பேசுகிறாள்‌. அம்மி யிருந்து அரணை அழிப்பான்‌. அம்மியும்‌ குழவியும்‌ ஆகாயத்தில்‌ பறக்கச்சே, எச்சிற்‌ கல்லை எனக்கு என்னகதி என்றாற்‌ போல அம்மியும்‌ குழவியும்‌ ஆடிக்காற்றில்‌ பறக்கச்சே, இலவம்‌ பஞ்சு எனக்கென்னகதி என்றதாம்‌. அம்முக்கள்ளி ஆடையைத்‌ தின்றால்‌ வெண்ணெய்‌ உண்டா? அம்மை குத்தினாலும்‌ பொம்மை குத்தினாலும்‌ வேண்டியதரிசி. அம்மைக்‌ கமர்க்களம்‌ ஆக்கிப்படை, எனக்‌ கமர்க்களம்‌ பொங்கிப்படை. அம்மைக்கு அமர்க்களம்‌ பொங்கிப்‌ படையுங்கள்‌. அம்மை வீட்டுத்‌ தெய்வம்‌ நம்மைவிட்டுப்போமா? அம்மையாரே வாரும்‌, கிழவனைக்‌ கொள்ளும்‌. அம்மையார்‌ எப்பொழுது சாவார்‌, கம்பளி எப்பொமுது நமக்கு மிச்சமாகும்‌? அம்மையார்‌ நூற்கிற நூலுக்கும்‌ பேரன்‌ அரைஞாண்‌ கயிற்றுக்கும்‌ சரி. அம்மையார்‌ பெறுவது அரைக்காசு, அவருக்குத்‌ தலை சிரைக்க முக்காற்காசு. அம்மையார்க்கு என்ன துக்கம்‌, கந்தைத்‌ துக்கம்‌. அயலார்‌ உடைமைக்குப்‌ பேயாய்ப்‌ பறக்கிறான்‌. அயலார்‌ உடைமையில்‌ அந்தகண்போல்‌ இரு. அயலான்‌ வாழப்‌ பகலே சரக்கெடுப்பது. அயல்‌ வீட்டான்‌ பிள்ளை ஆபத்துக்‌ குதவுவானா? அயல்‌ வீட்டு நெய்யே, என்‌ பெண்டாட்டி கையே. அயன்‌ இட்ட எழுத்தில்‌ அணுவளவும்‌ தப்பாது. அயன்‌ இட்ட கணக்கு ஆருக்கும்‌ தப்பாது. அயன்‌ சமைப்பை ஆராலும்‌ தன்ளக்கூடாது. அயிரையும்‌ சற்றே அருக்குமாம்‌ பிட்டுக்குள்‌ போட்டுப்‌ பிசறாமல்‌. அயோக்கியர்‌ அழகு அபரஞ்சிச்‌ சிமிழில்‌ நஞ்சு. அய்யன்‌ அளந்தபடி. அய்யா, அய்யா, அம்மா குறைக்‌ கேழ்வரகும்‌ அரைக்க வரச்சொன்னாள்‌. அய்யாசாமிக்கு கலியாணம்‌, அவரவர்‌ வீட்டிலே சாப்பாடு. அய்யா தாசி கவனம்பண்ண அஞ்சாளின்‌ சுமையாச்‌சுது. அய்யாத்துரைக்கு (அப்பாசாமிக்கு)க்‌ கலியாணம்‌, அவரவர்‌ வீட்டிலே சாப்பாடு, கொட்டுமுழக்குக்‌ கோயிலிலே, வெற்றிலை பாக்குக்‌ கடையிலே, சுண்ணாம்பு சூளையிலே. அய்யா பாட்டுக்கு அஞ்சடியும்‌ ஆறடியும்‌ தாண்டும்‌. அய்யாவையர்‌ கூழுக்கு அப்பையங்கார்‌ தாதாவா? அரகர என்கிறவருக்குத்‌ தெரியுமா, அமுது படைக்‌கிறவனுக்குத்‌ தெரியுமா? அள என்பது பெரிதோ, ஆண்டிக்கு இடுவது பெரிதா? அரகரன்‌ ஆண்டாலென்ன, மனிதன்‌ ஆண்டாலென்ன? அரக்குமுத்தி தண்ணீர்க்குப்‌ போனாள்‌, புண்‌ பிடித்தவன்‌ பின்னாலே போனான்‌. அரங்கின்றி வட்டாடலும்‌, அறிவின்றிப்‌ பேசலும்‌ ஒன்று. அரசனில்லாப்படை வெட்டுமா? அரசனுக்கு ஒருசொல்‌, அடிமைக்குத்‌ தலைச்சுமை. அரசனுக்குத்‌ துணை வயவானள்‌. அரசனுக்கு வலியார்‌ அஞ்சுவது எளியார்க்கு அனுகூலமாகிறது. அரசனும்‌ அரவும்‌ சரி. அரசனும்‌ அழலும்‌ சரி. அரசனும்‌ நெருப்பும்‌ பாம்பும்‌ சரி. அரசனைக்கண்ட கண்ணுக்குப்‌ புருஷனைக்கண்டால்‌ கொசுப்போல இருக்கிறது. அரசனை நம்பிப்‌ புருஷனைக்‌ கைவிட்டதுபோல. அரசன்‌ அருள்‌ அற்றால்‌ அனைவரும்‌ அற்றார்‌. அரசன்‌ அளவிற்கு (வரை) ஏறிற்று (எட்டியது). அரசன்‌ அன்று கொல்லும்‌, தெய்வம்‌ நின்றுகொல்லும்‌. அரசன்‌ இல்லாதநாடு, அச்சில்லாத தேர்‌. அரசன்‌ இல்லாத நாடு, புருஷன்‌ இல்லாத வீடு. அரசன்‌ உடைமைக்கு ஆகாயவாணி சாக்ஷி. அரசன்‌ எப்படியோ அப்படியே குடிகள்‌. அரசன்‌ எவ்வழி அவ்வழி குடிகள்‌. அரசன்‌ ஒன்றை இகழ்ந்தால்‌ ஒக்க இகழவேண்டும்‌, ஒன்றைப்‌ புகழ்ந்தால்‌ ஒக்கப்‌ புகழவேண்டும்‌. அரசன்‌ கல்லின்மேல்‌ கத்தரி (வழுதுணை) காய்க்கும்‌ என்றால்‌, கொத்து ஆயிரம்‌ குலை ஆயிரம்‌ என்பார்கள்‌. அரசன்‌ குடுமியையும்‌ பிடிக்கலாமென்று அம்பட்டன்‌ வேலையை விரும்புவதுபோல. அரசன்‌ வழிப்பட்டது அவனி. அரசன்‌ வழிப்படாதவன்‌ இல்லை. அரசில்லா நாடு அலக்கழிந்தாற்போல. அரசில்லாப்படை வெல்லுவதரிது. அரசுக்கு இல்லை சிறுமையும்‌ பெருமையும்‌. அரசுடையானை ஆகாயம்‌ காக்கும்‌. அரணை அலகு திறக்காது. அரணை கடித்தால்‌ அப்பொழுதே மரணம்‌. அரண்டவன்‌ கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்‌. அரண்மனை காத்தவனும்‌ அடுப்பங்கரை காத்தவனும்‌ வீண்போகிறதில்லை. அரண்மனைவாசல்‌ காத்தவனும்‌ பரிமடைகாத்தவனும்‌ பழுதுபோவதில்லை. அரண்மனைக்கு ஆயிரஞ்செல்லும்‌, குடியானவன்‌ என்ன செய்வான்‌? அரத்தை அரம்கொண்டும்‌ வயிரத்தை வயிரம்‌ கொண்டும்‌ அறுக்க வேண்டும்‌. அரபிக்குதிரையிலும்‌ ஐயம்பேட்டைத்‌ தட்டுவாணி நல்லது. அரமும்‌ அரமும்‌ கூடினால்‌ கின்னரம்‌. அரவத்தைக்‌ கண்டால்‌ கீரி விடுமா? அரவுக்கு இல்லை சிறுமையும்‌ பெருமையும்‌. அரனருள்‌ அல்லாது அணுவும்‌ அசையாது. அரிஅரி என்றால்‌ ராமா ராமா என்கிறான்‌. அரி என்கிற அக்ஷரம்‌ தெரிந்தால்‌ அதிகாரம்‌ பண்ணலாம்‌. அரி என்கிற அக்ஷரம்‌ தெரிந்தால்‌ அதிக்கிரமம்‌ பண்ணலாமா? அரி என்றால்‌ ஆண்டிக்குக்‌ கோபம்‌, அர என்றால்‌ தாதனுக்குக்‌ கோபம்‌. அரிஹர பிரமாதிகளாலும்‌ முடியாது. அரிசி என்று அள்ளிப்பார்ப்பாருமில்லை. உமி என்று ஊதிப்பார்ப்பாருமில்லை. அரிசி அள்ளின காக்கை போல. அரிசி ஆழாக்கானாலும்‌ அடுப்புக்கட்டி மூன்றுவேண்டும்‌. அரிசி உண்டானால்‌ வரிசையும்‌ உண்டு, அக்காள்‌ உண்டானால்‌ மச்சானும்‌ உண்டு. அரிசி உழக்கானாலும்‌ அடுப்பு மூன்று. அரிசி கொண்டு (உண்ண) அக்காள்‌ வீட்டுக்குப்போவானேன்‌? அரிசி மறந்த கூழுக்கு உப்பு ஒன்றுகுறையா? அரிசிக்குத்தக்க உலையும்‌ ஆமுடையானுக்குத்‌ தக்க வீறாப்பும்‌. அரிசிக்குத்‌ தக்க கனவுலை அரிசிப்பகையும்‌ ஆமுடையான்‌ பகையும்‌ உண்டா? அரிசிப்‌ பொதியுடன்‌ திருவாரூர்‌. அரிசியும்கறியும்‌ உண்டானால்‌ அக்காள்வீடு வேண்டுமா? அரிச்சந்திரன்‌ வீட்டுக்கு அடுத்த வீடு. அரிதாரம்‌ கொண்டுபோகிற நாய்க்கு அங்கு இரண்டடி இங்கு இரண்டடி. அரிது அரிது அஞ்செழுத்து உணர்தல்‌. அரித்து எரிக்கிற சுப்பிக்கு ஆயம்‌ தீர்வை உண்டா? அரிய சரீரம்‌ அந்தரத்தெறிந்த கல்‌. அரியது செய்து எளியதுக்கு ஏமாந்து திரிகிறான்‌. அரியுஞ்‌ சிவனும்‌ ஒண்ணு, அறியாதவன்‌ வாயிலே மண்ணு. அரியுஞ்சிவனும்‌ ஒன்று, அல்ல என்கிறவன்வாயிலே மண்ணு. அரிவாளும்‌ அசையவேண்டும்‌, ஆண்டை குடியும்‌ கெட வேண்டும்‌. அரிவாள்‌ சூட்டைப்போலக்‌ காய்ச்சல்‌ மாற்றவோ? அரிவான்‌ சுறுக்கே அரிவாள்முனை கருக்கே. அரிவை மொழிகேட்டால்‌ அபத்தன்‌ ஆவான்‌. அருகாகப்பழுத்தாலும்‌, விளாமரத்தில்‌ வெளவால்சேராது. அருக்காண முத்துக்‌ கரிக்கோலமானான்‌. அருக்காணி நாய்ச்சியார்‌ குரங்குப்பிள்ளை பெற்றாளாம்‌. அருக்காமணி முருக்கம்பூ. அருக்கித்தேடிப்‌ பெருக்கி அழி. அருங்கோடை துரும்பு அற்றுப்போகுது. அருஞ்சுனை நீருண்டால்‌ அப்பொழுதே ரோகம்‌. அருட்செல்வம்‌ ஆருக்கும்‌ உண்டு, பொருட்செல்வம்‌ ஆருக்கும்‌ இல்லை. அருணாப்‌ பரமே கருணாம்பரம்‌. அருண்டவன்‌ கண்ணுக்கு இருண்டதெல்லாம்‌ பேய்‌. அருத்தியைப்‌ பிடுங்கித்‌ துருத்தியிலே போட்டுத்‌ துருத்தியைப்‌ பிடுங்கி அருத்தியிலே போடுகிறது. அருமை அறியாதவன்‌ ஆண்டு என்ன, மாண்டு என்ன? அருமை அறியாதவனிடத்தில்‌ போனால்‌ பெருமை குறைந்துபோம்‌. அருமை அற்றவீட்டில்‌ எருமையும்‌ குடியிராது. அருமை மருமகன்‌ தலைபோனாலும்‌ போகட்டும்‌, ஆதி காலத்து உரல்போகலாகாது. அரும்புகோணினால்‌ அதின்‌ மணம்‌ குற்றமா? அருவருப்புச்‌ சோறும்‌ அசங்கிதக்‌ கறியும்‌. அருள்‌ இல்லார்க்கு அவ்வுலகில்லை, பொருள்‌ இல்லார்க்கு இவ்வுலகில்லை. அருள்வேணும்‌, பொருள்வேணும்‌, அடக்கம்‌ வேணும்‌. அரைக்கவுமாயம்‌, கரைக்கவுமாயம்‌. அரைக்காசுக்கு அழிந்த கற்பு ஆயிரம்பொன்‌ கொடுத்தாலும்‌ கிடையாது. அரைக்காசுக்குக்‌ குதிரை வாங்கவும்‌ வேண்டும்‌, ஆற்றைக்‌ கடக்கப்‌ பாயவும்‌ வேண்டும்‌. அரைக்காசுக்குப்‌ போன மானம்‌ ஆயிரம்‌ கொடுத்தாலும்‌ வாராது. அரைக்காசுக்கு வந்த வெட்கம்‌ ஆயிரம்‌ பொன்‌ கொடுத்தாலும்‌ போகாது. அரைக்காசை ஆயிரம்‌ பொன்னாக்குகிறவளும்‌ பெண்‌ சாதி, ஆயிரம்‌ பொன்னை அரைக்காசாக்குகிறவளும்‌ பெண்சாதி. அரைக்கிறவன்‌ ஒன்று நினைத்து அரைக்கிறான்‌, குடிக்‌கிறவன்‌ ஓன்று நினைத்துக்‌ குடிக்கிறான்‌. அரைக்கினும்‌ சந்தனம்‌ அதன்‌ மணம்‌ அறாது. அரைக்குடம்‌ ததும்பும்‌, நிறைகுடம்‌ ததும்பாது. அரைச்சல்லியை வைத்து எருக்கு இலையைக்‌ கடந்தது போல. அரைச்சிலை கட்டக்‌ கைக்கு உபசாரமா? அரைச்சொற்‌ கொண்டு அம்பலம்‌ ஏறலாமா? அரைச்சொற்‌ கொண்டு அம்பலம்‌ ஏறினால்‌, அரைச்‌சொல்‌ முழுச்சொல்லாமா? அரைஞாண்‌ கயிறும்‌ தாய்ச்சீலையுமாய்‌ விடுகிறவளும்‌ பெண்சாதி. அரைத்த பயறு முளைத்தாற்போல. அரைத்துட்டுக்கு பீ தின்கிறவன்‌. அரைத்துட்டிலே கலியாணம்‌, அதிலே கொஞ்சம்‌ பாண வேடிக்கை. அரைத்து மீந்தது அம்மி, சிரைத்து மீந்தது குடுமி. அரைப்பணங்‌ கொடுக்கப்‌ பால்மாறி, ஐம்பது பொன்‌ கொடுத்துச்‌ சேர்வைசெய்த கதை. அரைப்பணங்‌ கொடுத்து அழச்சொல்லி ஒருபணங்கொடுத்து ஓயச்சொன்னதுபோல. அரைப்பணச்‌ சேவகமானாலும்‌ அரண்மனைச்‌ சேவகம்‌ போல்‌ ஆகுமா? அரைப்பணத்துக்கு மருத்துவம்‌ பார்க்கப்போய்‌ ஐந்து பணத்து நெளி உள்ளே போய்விட்டது. அரையிலே புண்ணும்‌ அண்டையிலே கடனும்‌ ஆகாது. அரைவித்தைகொண்டு அம்பலம்‌ ஏறினால்‌ அரைவித்தை முழுவித்தை ஆகுமா? அரைவேலையைச்‌ சபையிலே கொண்டுவருவதா? அலுத்துக்‌ கொலுத்து அக்காளண்டைபோனால்‌ அக்காள்‌ இழுத்து மச்சானிடத்தில்‌ விட்டாளாம்‌. அலுத்து வியர்த்து அக்காள்‌ வீட்டுக்குப்போனால்‌ அக்காள்‌ இழுத்து மச்சானண்டையிற்‌ போட்டானாம்‌. அலை அடங்கியபின்‌ ஸ்நானம்‌ செய்வதுபோல. அலை எப்பொழுது ஒழியும்‌, தலை எப்பொழுது முழுகுகிறது? அலை ஓய்ந்து கடலாடலாமா? அலைபோல நாக்கும்‌, மலைபோல மூக்கும்‌, ஆகாசந்தொட்ட கையும்‌. அலைமோதும்போதே தலை முழுகுகிறது. அலைவாய்த்‌ துரும்புபோல்‌ அலைகிறது. அல்லக்காட்டு நரி பல்லைக்‌ காட்டுகிறது. அல்லாத வழியால்‌ பொருள்‌ ஈட்டல்‌, காமம்‌ துய்த்தல்‌ இவை ஆகா. அல்லாதவன்‌ வாயில்‌ கள்ளை வார்‌. அல்லல்‌ அருளாள்வார்க்கில்லை. அல்லல்‌ அற்ற படுக்கை அழகிலும்‌ அழகு. அல்லல்‌ ஒரு காலம்‌ செல்வம்‌ ஒரு காலம்‌. அல்லவை தேய அறம்‌ பெருகும்‌. அல்லற்பட்டு அழுதகண்ணீர்‌ செல்வத்தைக்குறைக்கும்‌. அல்லார்‌ அஞ்சலிக்கு நல்லார்‌ உதை மேல்‌. அல்லும்‌ பகலும்‌ கசடறக்‌ கல்‌. அவகடம்‌ உள்ளவன்‌ அருமை அறியான்‌. அவகுணக்காரன்‌ ஆவாசமாவான்‌. அவசரக்காரனுக்குக்‌ காக்கிலோ பெட்டு, நேக்குச்‌ சேத்திலோ பெட்டு. அவசரக்காரனுக்கு புத்தி மட்டு. அவசரக்‌ கோலம்‌ அள்ளித்‌ தெளித்ததுபோலச்‌ சொல்லுகிறாய்‌. அவசரத்தில்‌ அரிக்கண்‌ சட்டியிலும்‌ கை நுழையாது. அவசரத்தில்‌ உபசாரமா? அவசரத்தில்‌ செத்த பிணத்துக்குப்‌ பீச்சூத்தோடே மாரடிக்கிறாள்‌. அவசரத்தில்‌ குண்டுச்‌ சட்டியில்‌ கை நுழையாது. அவசரத்துக்குப்‌ பாவமில்லை. அவசரப்பட்ட மாமியார்‌ மருமகனைப்‌ புணர அழைத்‌தாளாம்‌. அவசாரி ஆடினாலும்‌ அதிருஷ்டம்‌ வேண்டும்‌, திருடப்‌ போனாலும்‌ திசை வேண்டும்‌. அவசாரி ஆமூடையான்‌ ஆபத்துக்‌ குதவுவானா? அவசாரி என்று ஆனைமேல்‌ ஏறலாம்‌, திருடி என்று தெருவில்‌ வரலாமா? அவதாரி போகவும்‌ ஆசை யிருக்கிறது, அடிப்பான்‌ என்று பயமுமாய்‌ இருக்கிறது. அவசாரிக்கு ஆணையில்லை, திருடிக்குத்‌ தெய்வமில்லை. அவசாரிக்கு வாய்‌ பெரிது, அஞ்சு ஆறு அரிசிக்குக்‌ கொதி பெரிது. அவசாரியிலே வந்து பெருவாரியிலே போகிறது. அவதந்திரம்‌ தனக்கு அந்தரம்‌. அவதிக்‌ குடிக்குத்‌ தெய்வமே துணை. அவத்தனுக்கும்‌ சமர்த்தனுக்கும்‌ காணி கவை இல்லை. அவப்பொழுதிலும்‌ தவப்பொழுது நல்லது. அவமானம்‌ பண்ணி வெகுமானாம்‌ பேசுகிறான்‌. அவரவர்‌ அக்கறைக்கு அவரவர்‌ பாடுபடுவார்‌. அவரவர்‌ எண்ணத்தை ஆண்டவர்‌ அறிவார்‌. அவரவர்‌ மனசே அவரவர்க்குச்‌ சாட்சி. அவரை விதைத்தால்‌ துவரை முளைக்குமா? அவரா சுறுக்கே அரிவாள்மணைக்‌ கருக்கே? அவருடைய சிறகு முறிந்துபோயிற்று. அவலட்சணம்‌ உன்ள குதிரைக்கு சுழிசுத்தம்‌ பார்க்க வேணுமா? அவலமாய்‌ வாழ்பவன்‌ சவலமாய்ச்‌ சாவான்‌. அவலைச்‌ சாக்கிட்டு உரலை இடிக்கிறது. அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறாள்‌. அவலை முக்கித்‌ தின்னு, எள்ளை நக்கித் தின்னு. அவளவன்‌ என்பதைவிட அரிஅரி என்பது நலம்‌. அவளுக்கிவள்‌ எழுந்திருந்து உண்பாள்‌. அவளுக்கு ரொம்பத்‌ தக்குத்தெரியும்‌. அவளுக்கெவள்‌ ஈடு அவளுக்கவளே சோடு அவளைக்‌ கண்ட கண்ணாலே இன்னொருத்தியைக்‌ காணுகிறதா? அவள்‌ அழகுக்குத்‌ தாய்‌ வீடு. அவன்‌ அழகுக்குப்‌ பத்துபேர்‌ வருவார்கள்‌, கண்‌ சிமிட்டினால்‌ ஆயிரம்பேர்‌ மயங்கிப்‌ போவார்கள்‌. அவள்‌ எமனைப்‌ பலகாரம்‌ பண்ணுவாள்‌. அவள் சமர்த்துப்‌ பானை சந்தியில்‌ கவிழ்ந்தது. அவன்‌ சம்பத்து அறியாமல்‌ கவிழ்ந்தது. அவள்‌ சாட்டிலே திரை சாட்டா. அவள்‌ சொல்‌ உனக்கு குரு வாக்கு. அவள்‌ பலத்தை மண்கொண் டொளிச்சுது. அவன்‌ பாடுகிறது குயில்‌ கூவுகிறது போல. அவன்‌ பேர்‌ தங்கமாம்‌ அவள்‌ காதில்‌ பிச்சோலையாம்‌. அவன்‌ பேர்‌ கூந்தலழகி அவள்‌ தலை மொட்டை அவளிடத்தில்‌ எல்லாரும்‌ பிச்சை வாங்கவேண்டும்‌. அவனருளுற்றால்‌ அனைவரு முற்றார்‌, அவனருளற்றால்‌ அனைவருமற்றார்‌. அவனியில்லை ஈடு, அவளுக்கவளே சோடு. அவனுக்கு ஆகாசம்‌ மூன்று விரற்கடை. அவனுக்குக்‌ கப்படாவுமில்லை வெட்டுக்‌ கத்தியுமில்லை. அவனுக்குச்‌ சாண்‌ ஏறினால்‌ முழம்‌ சறுக்குது. அவனுக்குச்‌ சுக்கிரதிசை அடிக்கிறது. அவனுக்குச்‌ சுக்கிரதிசை சூத்திலே அடிக்கிறது. அவனுக்குப்‌ பொய்ச்சத்தியம்‌ பாலும்‌ சோறும்‌ அவனுக்கு ஜெயில்‌ தாய்‌ வீடு. அவனுக்கும்‌ இவனுக்கும்‌ எருமைச்‌ சங்காத்தம்‌. அவனுக்குள்ளே அகப்பட்டிருக்கிறதாம்‌ என்‌ பிழைப்‌பெல்லாம்‌. அவனுடைய பேச்சு காற்சொல்லும்‌ அரைச்சொல்லும்‌. அவனுடைய வாழ்வு நண்டுக்குடுவை உடைந்ததுபோல்‌ இருக்கிறது. அவனை தரித்து வைத்தாற்போல்‌ இருக்கிறான்‌. அவனைப்‌ பேச்சிட்டுப்‌ பேச்சுவாங்கி ஆமை மல்லாத்துகிறாப்போல்‌ மல்லாத்திப்போட்டான்‌. அவனே இவனே என்பதைவிடச்‌ சிவனே சிவனே என்கிறது நல்லது. அவனே வெட்டவும்‌ விடவும்‌ கர்த்தன்‌. அவனோடு இவனை ஏணிவைத்துப்பார்த்தாலும்‌ காணாது. அவன்‌ அசையாது (அசையாமல்‌) அணு அசையாது. அவன்‌ அதிகாரம்‌ கொடிகட்டிப்‌ பறக்கிறது. அவன்‌ அண்டை அந்தப்பருப்பு வேகாது. அவன்‌ அவன்‌ எண்ணத்தை, ஆண்டவன்‌ ஆக்கினாலும்‌ ஆக்குவான்‌, அழித்தாலும்‌ அழிப்பான்‌. அவன்‌ அவன்‌ செய்த வினை அவன்‌ அவனுக்கு அவன்‌ அவன்‌ மனசே அவன்‌ அவனுக்குச்‌ சாட்சி. அவன்‌ அன்றி ஓர்‌ அணுவு மசையாது. அவன்‌ ஆகாசத்தை வடுப்படாமல்‌ கடிப்பேனென்‌கிறான்‌. அவன்‌ இட்டதே சட்டம்‌. அவன்‌ இராச சமுகத்திற்கு எலுமிச்சம்பழம்‌. அவன்‌ உள்ளெல்லாம்புண்‌, உடம்பெல்லாம்‌ கொப்பளம்‌. அவன்‌ உனக்குக்‌ கிள்ளுக்கீரையா? அவன்‌ எங்கே இருந்தான்‌, நான்‌ எங்கே இருந்தேன்‌. அவன்‌ எரி பொரியென்று விழுகிறான்‌. அவன்‌ எனக்கு அட்டமத்துச்சனி. அவன்‌ என்‌ தலைக்கு உலை வைக்கிறான்‌. அவன்‌ என்னை ஊதிப்பறக்கடிக்கப்‌ பார்க்கிறான்‌. அவன்‌ ஒரு குளிர்ந்த கொள்ளி. அவன்‌ ஓடிப்பாடி நாடியில்‌ அடங்கினான்‌. அவன்‌ கழுத்துக்குக்‌ கத்தி தட்டுகிறான்‌. அவன்‌ காலால்‌ இட்ட வேலையைக்‌ கையால்‌ செய்வான்‌. அவன்‌ காலால்‌ இட்ட வேலையைத்‌ தலையால்‌ செய்வான்‌. அவன்‌ காலால்‌ கீறினதை நான்‌ நாவால்‌ அழிக்கிறேன்‌. அவன்‌ காலால்‌ முடிந்ததைக்‌ கையால்‌ அவிழ்க்க முடியாது. அவன்குடித்தனத்தை கமுக்கமாய்கொண்டுபோகிறான்‌. அவன்‌ கெட்டான்‌ குடியன்‌ எனக்கு இரண்டு இராம்‌ வாரு (மொந்தைபோடு). அவன்‌ கை மெத்தக்‌ கூராச்சே! அவன்‌ கையைக்கொண்டே அவன்‌ கண்ணில்‌ குத்தினான்‌. அவன்‌ கொஞ்சப்‌ புள்ளியா? அவன்‌ சாதிக்கு எந்த புத்தியோ குலத்துக்கு எந்த ஆசாரமோ அது தான்‌ வரும்‌. அவன்‌ சாயம்‌ வெளுத்துப்‌ போய்விட்டது. அவன்‌ சிறகில்லாப்பறவை. அவன்‌ சிறகொடிந்த பறவை. அவன்‌ சூத்தைத்‌ தாங்குகிறான்‌. அவன்‌ சொன்னதே சட்டம்‌ இட்டதே பிச்சை அவன்‌ சோற்றுக்குத்‌ தாளம்‌ போடுகிறான்‌. அவன்‌ சோற்றை மறந்து விட்டான்‌. அவன்‌ தலையில்‌ ஓட்டைக்‌ கவிழ்ப்பான்‌. அவன்‌ தன்னாலே தான்‌ கெட்டால்‌ அண்ணாவி என்ன செய்வார்‌? அவன்‌ தொட்டுக்‌ கொடுத்தான்‌, நான்‌ இட்டுக்‌ கொடுத்‌தேன்‌. அவன்‌ தொத்தி உறவாடித்‌ தோலுக்கு மன்றாடுகிறான்‌. அவன்‌ நடைக்குப்‌ பத்துபேர்‌ வருவார்கள்‌, கைவீச்சுக்‌குப்‌ பத்துபேர்‌ வருவார்கள்‌. அவன்‌ நா அசைய நாடு அசையும்‌. அவன்‌ பசியாமல்‌ கஞ்சி குடிக்கிறான்‌. அவன்‌ பூராயமாய்ப்‌ பேசுகிறான்‌. அவன்‌ பேசுகிறதெல்லாம்‌ தில்லும்‌ பில்லும்‌ திருவாதிரை. அவன்‌ பேச்சு விளக்கெண்ணெய்‌ சமாசாரம்‌. அவன்‌ பேச்சைத்‌ தண்ணீர்மேல்‌ எழுதிவைக்க வேண்டும்‌. அவன்‌ மிதித்த இடத்தில்‌ புல்லும்‌ சாகாது. அவன்‌ மிதித்த இடம்‌ பற்றி எரிகின்றது. அவன்‌ மூத்திரம்‌ விளக்காய்‌ எரிகிறது. அவன்‌ மெத்த அத்து மிஞ்சின பேச்சுக்காரன்‌. அவன்‌ ரொம்ப வைதீகமாய்ப்‌ பேசுகிறான்‌. அவன்‌ வல்லாள கண்டனை வாரிப்‌ போரிட்டவன்‌. அவிவேகி உறவிலும்‌ விவேகி பகையே நன்று. அவிழ்‌ என்ன செய்யும்‌ அஞ்சுகுணம்‌ செய்யும்‌, பொருள்‌ என்னசெய்யும்‌ பூவை வசம்‌ செய்யும்‌. அவையிலும்‌ ஒருவன்‌ சவையிலும்‌ ஒருவன்‌. அவ்வளவு இருந்தால்‌ அடுக்கிவைத்து வாழேனோ? அழ அழச்‌ சொல்லுவார்‌ தன்‌ மனிதர்‌, சிரிக்கச்‌ சிரிக்கச்‌ சொல்லுவார்‌ புறத்தியார்‌. அழகிருந்தென்ன, அதிருஷ்டம்‌ இருக்கவேணும்‌. அழகிலே பிறந்த பவளக்கொடி, ஆற்றிலே பிறந்த சாணிக்கூடை. அழகிற்கு மூக்கை அழிப்பார்‌ உண்டா? அழகு இருந்து அழும்‌, அதிருஷ்டம்‌ இருந்து உண்ணும்‌. அழகு ஒழுகுது, மடியிலே கட்டடா கலயத்தை. அழகு ஒஓழுகுகிறது, நாய்‌ வந்து நக்குகிறது, ஓட்டைப்‌ பானைகொண்டுவா பிடித்து வைக்க. அழகுக்கு இட்டால்‌ ஆபத்துக்குதவும்‌. அழகுக்குச்‌ செய்தது ஆபத்துக்குதவும்‌. அழகு சொட்டுகிறது. அழகு சோறுபோடுமா, அதிருஷ்டம்‌ சோறு போடுமா? அழகு பெண்ணே காற்றாடி (காத்தாயி), உன்னை) அழைக்கிறாண்டி கூத்தாடி. அழச்சொல்லுகிறவன்‌ பிழைக்கச்‌ சொல்லுவான்‌, சிரிக்‌கச்சொல்லுகறவன்‌ கெடச்சொல்லுவான்‌. அழச்சொல்லுவார்‌ தமர்‌, சிரிக்கச்‌ சொல்லுவார்‌ பிறர்‌. அழிக்கப்படுவானை கடவுள்‌ அறிவீனன்‌ ஆக்குவார்‌. அழித்துக்‌ கழித்துப்போட்டு வழித்து நக்கி யென்று பெயரிட்டானாம்‌. அழிந்த கொல்லையில்‌ குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன? அழிந்தவள்‌ ஆரோடு போனால்‌ என்ன? அழிந்து பழஞ்சோறாய்ப்‌ போச்சுது. அழிவழக்குச்‌ சொன்னவன்‌, பழிபொறுக்கும்‌ மன்னவன்‌. அழுகள்ளன்‌ தொழுகள்ளன்‌ ஆசாரக்கள்ளன்‌. அழுகிற ஆணையும்‌ சிரிக்கிற பெண்ணையும்‌ நம்பப்‌படாது. அழுகிறதற்கு அரைப்பணம்‌ கொடுத்து ஓய்கிறதற்கு ஒரு பணம்‌ கொடு. அழுகிற பிள்ளைக்கு வாழைப்பழம்‌ காட்டுகிறபோல அழுகிற வீட்டில்‌ இருந்தாலும்‌ ஒழு(கு)கிற வீட்டில்‌ இருக்கலாகாது. அழுகிற வேளைபார்த்து அக்குள்‌ பாய்ச்சுகிறான்‌. அழுகை ஆங்காரத்தின்‌ மேலும்‌, சிரிப்பு கெலிப்பின்‌ மேலும்‌ தான்‌. அழுகையும்‌ ஆங்காரமும்‌ சிரிப்புக்‌ கெலிப்போடே அழுக்குக்குள்‌ இருக்கும்‌ மாணிக்கம்‌. அழுக்குச்‌ சீலைக்குள்ளே மாணிக்கம்‌. அழுக்கை அழுக்குக்கொல்லும்‌, இழுக்கை இழுக்குக்‌ கொல்லும்‌. அழுக்கைத்‌ துடைத்து மடியில்‌ வைத்தாலும்‌ புழுக்கைக்‌ குணம்‌ போகாது. அழுத கண்ணும்‌ சிந்திய மூக்கும்‌. அழுத பிள்ளை உரம்‌ பெறும்‌. அழுத பிள்ளை பால்குடிக்கும்‌. அழுத பிள்ளையும்‌ சிரித்ததாம்‌, கழுதைப்பாலைக்‌ குடித்‌ததாம்‌. அழுத பிள்ளையும்‌ வாய்மூடும்‌ அதிகாரம்‌. அழுதவனுக்கு அகங்காரமில்லை. அழுதாலும்‌ பிள்ளை அவளே பெறவேண்டும்‌. அழுத்த நெஞ்சன்‌ ஆருக்கு முதவான்‌, இளகின நெஞ்சன்‌ எவர்க்கும்‌ உதவுவான்‌. அழுதபிள்ளைத்‌ தாய்ச்சிக்குப்‌ பணயம்‌ கொடுத்தால்‌ அநுபவிக்க ஓட்டுமா குழந்தை? அழுவார்‌ அழுவார்‌ தம்‌ துக்கம்‌ அசலார்க்கல்ல அழுவார்‌ அழுவார்‌ தம்‌ தம்‌ துக்கமே, திருவன்‌ பெண்டீருக்கு அழுவாரில்லை. அழுவார்‌ அற்ற பிணமும்‌ ஆற்றுவார்‌ அற்ற சுடலையும்‌ அழையா வீட்டிற்கு நுழையாச்‌ சம்பந்தி. அளகாபுரி கொள்ளையானாலும்‌ அதிருஷ்ட ஈனனுக்கு ஒன்றுமில்லை. அளகாபுரியிலும்‌ விறகு தலையன்‌ உண்டு. அளகேசன்‌ ஆனாலும்‌ அளவு அறிந்து செலவுசெய்ய வேண்டும்‌. அளக்கிற நாழி அகவிலை அறியுமா? அளந்த அளந்த நாழி ஒழிந்து ஓழிந்து வரும்‌. அளந்த நாழிகொண்டு அளப்பான்‌. அளந்த ஒருசாணில்லை, அரிந்தால்‌ ஒருசட்டிகாணாது. அளவளாலில்லாதவன்‌ வாழ்க்கைகுளவளாக்கோடின்றி நீர்‌ நிறைந்தற்கு. அளவிட்டவரைக்‌ கள விடலாமா? அளவிற்கு மிஞ்சினால்‌ அமுதமும்‌ விஷமாகும்‌. அளவுக்கு மிஞ்சினால்‌ அமிருதமும்‌ நஞ்சு. அளுங்குப்‌ பிடி பிடித்தாற்போல அள்ளாது குறையாது சொல்லாது பிறவாது. அள்ளிக்குடிக்கத்‌ தண்ணீரில்லை, அவனள்பேர்‌ கங்காதேவி. அன்ளிக்கொடுத்தால்‌ சும்மா, அளந்து கொடுத்தால்‌ கடன்‌. அள்ளிக்கொண்டே போகச்சே கிள்ளிக்கொண்டு வருகிறான்‌. அன்ளிப்பால்‌ வார்க்கையிலே சொல்லிப்பால்வார்த்திருக்குது. அள்ளுகிறவன்‌ இடத்தில்‌ இருக்கல்‌ ஆகாது, கின்ளுகிறவன்‌ இடத்தில்‌ இருந்தாலும்‌. அள்ளுவது எல்லாம்‌ நாய்‌ தனக்கென்று எண்ணுமாம்‌. அறக்கப்பறக்கப்‌ பாடுபட்டாலும்‌ படுக்கப்பாயில்லை. அறக்கல்வி முழுமொட்டை. அறக்காத்தான்‌ பெண்டிழந்தான்‌, அறுகாதவழி சுமந்து அழுதான்‌. அறக்குழைத்தாலும்‌ குழைப்பாள்‌, அரிசியாய்‌ இறக்கினாலும்‌ இறக்குவாள்‌. அறக்கூர்மை முழுமொட்டை. அறங்கையும்‌ புறங்கையும்‌ நக்குதே. அறச்செட்டு முழுநஷ்டம்‌. அறத்தால்‌ வருவதே இன்பம்‌. அறநனைந்தவருக்குக்‌ கூதல்‌ என்ன? அறப்பத்தினி ஆமுடையானை அப்பா என்று அழைத்த கதை. அறப்படித்த பூனை காடிப்பானையில்‌ தலைபோடும்‌. அறப்படித்த மூஞ்சுறு கழுநீர்ப்பானையில்‌ விழுந்தது போல. அறப்படித்தவன்‌ அங்காடிபோனால்‌ விற்கவும்‌ மாட்‌டான்‌ கொள்ளவும்‌ மாட்டான்‌. அறப்படித்தவர்‌ கூழ்ப்பானையில்‌ விழுந்தார்‌. அறப்பேசி உறவாடவேண்டும்‌. அறமுறுக்கினால்‌ அற்றுப்போகும்‌. அறமுறுக்கினால்‌ கொடி முறுக்குப்படும்‌. அறமுறுக்குக்‌ கொடும்புரிகொண்டு அற்றுவிடும்‌. அறம்‌ பொருள்‌ இன்பம்‌ எல்லார்க்கும்‌ இல்லை. அறவடிக்குமுன்‌ சோறு காடிப்பானையில்‌ விழுந்தாற்‌ போல. அறவுங்கொடுங்கோல்‌ அரசன்‌ கீழ்க்‌ குடியிருப்பிற்‌ குறவன்‌ கீழ்க்‌ குடியிருப்பு மேல்‌. அறிஞர்க்கழகு அகத்துணர்ந்து அறிதல்‌. அறிந்த ஆண்டையென்று கும்பிடப்போனால்‌, உங்கள்‌ அப்பன்‌ பத்துப்பணம்‌ கொடுக்கவேணும்‌ கொடு என்றான்‌. அறிந்தபார்ப்பான்‌ சிநேகிதன்‌, ஆறுகாசுக்கு மூன்று தோசையா? அறிந்தவனென்று கும்பிட அடிமைவழக்கிட்ட கதை. அறிந்து அறிந்து செய்கிறபாவத்தை, அழுது அழுது தொலைக்க வேணும்‌. அறிந்தும்‌ கெட்டேன்‌ அறியாமலும்‌ கெட்டேன்‌, சொறிந்து புண்‌ ஆயிற்று. அறிய அறியக்‌ கெடுவார்‌ உண்டா? அறியாத நாளெல்லாம்‌ பிறவாத நாள்‌. அறியாப்பிள்ளை ஆனாலும்‌ ஆடுவான்‌ மூப்பு. அறியாப்பிள்ளை புத்தியைப்‌ போல. அறியாமல்‌ தாடியை வளர்த்தது அம்பட்டன்‌ கையிற்‌ கொடுக்கவா? அறிவில்லார்‌ சிநேகம்‌ அதிக உத்தமம்‌. அறிவீனர்தமக்கு ஆயிரம்‌ உரைக்கினும்‌ அவம்‌. அறிவீனனிடத்தில்‌ புத்தி கேளாதே. அறிவு ஆர்‌ அறிவார்‌? ஆய்ந்தவர்‌ அறிவார்‌. அறிவு இல்லாச்‌ சயனம்‌ அம்பரத்திலுமில்லை. அறிவு இல்லாதவன்‌ பெண்களிடத்திலும்‌ தாழ்வுபடுவான்‌. அறிவு இல்லார்‌ தமக்கு ஆண்மையுமில்லை. அறிவு கெட்டவனுக்கு ஆர்‌ சொல்லியும்‌ என்ன? அறிவுடன்‌ ஞானம்‌ அன்புடன்‌ ஒழுக்கம்‌. அறிவுடையாரை அடுத்தாற்போதும்‌. அறிவுடையாரை அரசனும்‌ விரும்பும்‌. அறிவுதரும்‌ வாயும்‌ அன்பு உரைக்கும்‌ நாவும்‌ அறிவு புறம்போய்‌ அண்டது போல அறிவு பெருத்தோன்‌ அல்லல்‌ (நோய்‌) பெருத்தோன்‌. அறிவு மனதை அரிக்கும்‌. அறிவேன்‌ அறிவேன்‌ ஆலிலை புளியிலைபோலிருக்கும்‌. அறுகங்கட்டைபோல்‌ அடிவேர்‌ துளிர்க்கிறது. அறுகங்கட்டையும்‌ ஆபத்துக்குதவும்‌ அறுக்க ஊறும்‌ பூம்பாளை, அணுக ஊறும்‌ ஏற்றின்பம்‌. அறுக்கமாட்டாதவன்‌ இடுப்பிலே ஐம்பத்தெட்டு அரிவாள்‌. அறுதலி மகனுக்கு அங்கமெல்லாம்‌ சேட்டை. அறுதலிமகனுக்கு வாழ்க்கைப்பட்டு விருதாவிலே தாலி அறுத்தேன்‌. அறுத்த கோழி துடிக்குமாப்‌ போல. அறுத்தவள்‌ ஆண்பிள்ளை பெற்றகதை அறுத்தவிரலுக்குச்‌ சுண்ணாம்பு தடவமாட்டான்‌, ஆண்டிவந்தாலும்‌ பிச்சைபோடமாட்டான்‌. அறுத்துக்‌ கொண்டதாம்‌ கழுதை எடுத்துக்கொண்டதாம்‌ ஓட்டம்‌. அறுந்த விரலுக்குச்‌ சுண்ணாம்பு கிடையாது. அறுபது நாளைக்கு எழுபது கந்தை. அறுபத்துநாலடிக்‌ கம்பத்தி லேறி ஆடினாலும்‌,அடியிலிறங்கித்தான்‌ தியாகம்‌ வாங்கவேண்டும்‌. அறுபத்தெட்டுக்‌ கோரம்பலம்‌. அறுப்புக்காலத்தில்‌ எலிக்கு ஐந்துபெண்சாதி. அறுவாய்க்கு வாய்பெரிது, அரிசிக்குக்‌ கொதிபெரிது அறைக்கீரைப்‌ புழுதின்னாதவனும்‌ அவசாரிகையில்‌ சோறுண்ணாதவனும்‌ இல்லை. அறையில்‌ ஆடி, அல்லவோ அம்பலத்தில்‌ ஆடவேண்டும்‌. அறையில்‌ இருந்தபேர்களை அம்பலம்‌ ஏற்றுகிற புரட்டன்‌. அறைவீட்டுச்செய்தி அம்பலத்தில்‌ வரும்‌. அற்ப ஆசை கோடிதவத்தைக்‌ கெடுக்கும்‌ அற்பக்கோபத்தினால்‌ அறுந்தமூக்கு ஆயிரம்‌ சந்தோஷம்‌ வந்தாலும்‌ வருமா? அற்பசகவாசம்‌ பிராணசங்கடம்‌. அற்பசுகம்‌ கோடிதுக்கம்‌. அற்பத்திற்கு அழகு குலைகிறதா? அற்பத்‌ துடைப்பமானாலும்‌ அகத்தூசியை அடக்கும்‌ அற்பர்‌ சிநேகம்‌ பிராண கண்டிதம்‌. அற்பர்‌ சிநேகம்‌ பிராண சங்கடம்‌. அற்பனுக்கு பவிஷு(ஐசுவரியம்‌) வந்தால்‌ அர்த்த ராத்திரி குடை பிடிப்பான்‌. அற்பன்கை ஆயிரம்பொன்னிலும்‌ சற்புத்திரன்‌ கைத்தவிடு நன்று. அற்பன்‌ பணம்‌ படைத்தால்‌ அர்த்தராத்திரி குடைபிடிப்பான்‌. அற்பன்‌ பணம்‌ படைத்தால்‌ வைக்க வகை அறியான்‌. அற்றது பற்றெனில்‌ உற்றது வீடு. அற்றத்துக்கு உற்றதாய்‌. அனந்தத்துக்கு ஒன்றாய்‌ உரையிட்டாலும்‌ அளவிடப்‌ போகாது. அனல்குளிர்‌ வெதுவெதுப்பு இம்மூன்றுகாலமும்‌ ஆறு காலத்திற்குள்‌ அடங்கும்‌. அனற்றை இல்லா ஊரிலே வண்ணாரிருந்து கெட்டார்கள்‌. அனுபோகம்‌ தொலைந்தால்‌ அவிழ்தம்‌ பலிக்கும்‌. அன்பற்ற மாமியாருக்குக்‌ கால்பட்டால்‌ குற்றம்‌ கை பட்டால்‌ குற்றம்‌. அன்பற்ற மாமியாருக்குக்‌ கும்பிடுகிறதும்‌ குற்றந்தான்‌. அன்பற்றார்‌ வாசலிலே பின்பற்றிப்‌ போகாதே. அன்பான சிநேகிதனை ஆபத்தில்‌ அறி. அன்பில்லார்‌ தமக்கு ஆதிக்கம்‌ இல்லை. அன்பு இருந்தால்‌ ஆகாததும்‌ ஆகும்‌. அன்புடையானைக்‌ கொடுத்துஅலையச்சே அசல்வீட்‌டுக்காரன்‌ வந்து அழைத்தகதை. அன்புள்ள குணம்‌ அலையில்லா நதி. அன்பே பிரதானம்‌ அதுவே வெகுமானம்‌. அன்று ஆயிரம்‌ பொன்னிலும்‌, நின்றற ஒருகாசு பெரிது. அன்றில்லை இன்றில்லை அழுகல்‌ பலாக்காய்‌, கலியாணவாசலிலே கலந்துண்ண வந்தாயே! அன்று இறுக்கலாம்‌ நின்றிறுக்கலாகாது. அன்று எழுதினவன்‌ அழித்து எழுதுவானோ? அன்று கண்டதை அடுப்பில்போட்டு ஆக்கினபானையைத்‌ தோளில்‌ போட்டுக்கொண்டு திரிகிறதுபோல்‌. அன்று கண்ட மேனிக்கு அழிவு இல்லை. அன்று கண்டனர்‌ இன்றுவந்தனர்‌. அன்று கழி அன்று கழி. அன்று குடிக்கத்‌ தண்ணீரில்லை ஆனைமேல்‌ அம்பாரி வேணுமாம்‌. அன்று கொள்‌ நின்று கொள்‌ என்றும்‌ கொள்ளாதே. அன்றுசாப்பிட்ட சாப்பாடு இன்னும்‌ ஆறுமாசத்திற்‌குத்‌ தாங்கும்‌. அன்றுதின்ற ஊண்‌ ஆறுமாசத்துப்பசியை அறுக்கும்‌. அன்றுதின்ற சோறு ஆறு மாதத்திற்கு ஆமா? அன்றுமில்லை காற்று, இன்றுமில்லை குளிர்‌. அன்றுமில்லை தையல்‌, இன்றுமில்லை பொத்தல்‌. அன்றைக்காடை இன்றைக்குக்கொடை என்றைக்கு விடியும்‌ இடையன்‌ தரித்திரம்‌? அன்றைக்கு அடித்த அடி ஆறுமாதம்‌ தாங்கும்‌. அன்றைக்குக்‌ இடைக்கிற ஆயிரம்‌ பொன்னிலும்‌ இன்‌றைக்குக்‌ கிடைத்த அரைக்காசு பெரிது. அன்றைக்கெழுதினதை அழித்தெழுதப்‌ போகிறானா? அன்றைக்குச்‌ சொன்னசொல்‌ சென்ம சென்மத்துக்‌கும்‌ உறைக்கும்‌. அன்றைக்குத்‌ தின்கிற பலாக்காயைவிட இன்றைக்குத்‌ தின்கிற களாக்காய்‌ பெரிது. அன்னதானத்திற்குச்‌ சரி என்ன தானமிருக்கிறது? அன்னநடை நடக்கப்போய்க்‌ காகம்‌ தன்‌ நடையும்‌ இழந்‌தாற்போல. அன்னநடை நடக்கப்போய்த்‌ தன்‌ நடையும்‌ கெட்டாற்‌ போல. அன்னப்பாலுக்குச்‌ சிங்கி யடித்தவன்‌ ஆவின்‌ பாலுக்‌குச்‌ சர்க்கரை தேடுகிறான்‌. அன்னப்பிடி வெல்லப்பிடி ஆச்சுது. அன்ன மயம்‌ இன்றிப்‌ பின்னை மயம்‌ இல்லை. அன்னமயம்‌ பிராணமயம்‌. அன்னம்‌ இட்டாரைக்‌ கன்னம்‌ இடலாமா? அன்னம்‌ இறங்குவதே அபான வாயுவால்‌. அன்னம்‌ ஓடுங்கினால்‌ அஞ்சும்‌ ஓடுங்கும்‌. அன்னம்‌ மிகக்கொள்வானும்‌ ஆடை அழுக்கு ஆவானும்‌ பதர்‌. அன்னம்‌ முட்டானால்‌ எல்லாம்‌ முட்டு. அன்னிய சம்பந்தமே யல்லாமல்‌ அத்தை சம்பந்தமில்லை என்கிறான்‌. அன்னிய மாதர்‌ அவதிக்கு உதவுவாரா? அன்னைக்கு உதவாதவன்‌ ஆருக்கு மாகான்‌. அன்னையும்‌ பிதாவும்‌ முன்னறி தெய்வம்‌.